மதநல்லிணகத்திற்கு எடுத்துக்காட்டு : பொன்னமராவதி அருகே முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்!!!



பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிக்கு இஸ்லாமிய இளைஞர்கள் ரூ. 25 ஆயிரம் நன்கொடை வழங்கிய நிகழ்வு பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலகுறிச்சியில் முத்துமாரியம்மன் கோயிலுக்கு, வரும் செப்.13 ஆம் தேதி (ஆவணி 27) குடமுழுக்கு விழா நடத்த பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கென பல்வேறு தரப்பினரும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

அதுபோல இந்த ஊராட்சிக்குள்பட்ட ரெகுநாதபட்டியைச் சார்ந்த தற்போது மலேசியாவில் பணிபுரிந்து வரும் இஸ்லாமிய இளைஞர்கள் ரூ. 25 ஆயிரம் கோயில் திருப்பணிக்காக வழங்கியுள்ளது இப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆர்.பாலகுறிச்சி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சத்தியமூர்த்தி கூறியது,

இச்சம்பவம் சமுதாய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
கோயில் திருப்பணிக்கென எவரிடமும் விழாக்குழுவினர் நிதி கேட்கவில்லை. அவர்களாக முன்வந்து நன்கொடை வழங்கி வருகிறார்கள். தற்போது இஸ்லாமிய இளைஞர்கள் கோயில் திருப்பணிக்காக கொடை வழங்கியது எங்களிடையே உள்ள நல்லுறவை காட்டுகிறது. மேலும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது என்றார். 

Post a Comment

0 Comments