புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மின்னணுக் கழிவு விதிகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தல்



மின்னணு சாதன தயாரிப்பாளர்கள், வியாபாரிகள், நுகர்வோர்கள் மின்னணுக் கழிவு விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது;

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், நாட்டில் மின்னணுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் கையாளுதல் மற்றும் அகற்றல் குறித்து மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள் 2016-யை அறிவிக்கை செய்துள்ளது.

இவ்விதிகளின்படி, மின்னணுக் கழிவு என்பது நுகர்வோர் அல்லது மொத்த நுகர்வோர் மின் மற்றும் மின்னணு சாதனங்கள் (கணினி, மடிக்கணினி, அச்சிடும் இயந்திரம், தொலைபேசி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, துணி துவைக்கும் இயந்திரம், குளிர்சாதன இயந்திரம், மின் விளக்குகள் போன்றவை) பயன்படுத்திய பின் கழிவுகளாக வெளியேற்றுதல் மற்றும் உற்பத்தியின்போது வெளியேற்றப்படும் கழிவுகளையும் சேர்த்தது.

மின்னணு சாதனங்கள் தயாரிப்பாளர்கள், தங்களது சாதனங்களை விநியோகஸ்தர்கள் மூலமாகவோ, சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விற்பனை செய்தபின்னர், அப்பொருள்களின் ஆயுள்காலம் முடிந்தவுடன் தயாரிப்பாளர்களின் நீடித்தப் பொறுப்பு என்ற அடிப்படையில் அவற்றைத் திரும்பப் பெற்று மறுசுழற்சிக்கு அனுப்புவது கடமையாகும்.

இவ்விதிகளின்படி, மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அங்கீகாரம் பெறுவதற்கு தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்னணுக் கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்வோர், சீரமைப்போர், பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர், மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அங்கீகாரம் கோரி அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், ஆண்டு அறிக்கையினை ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மின்னணுக் கழிவுகள் சேகரிப்பு செய்யும் மையங்கள், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கையாளப்படும் மின்னணுக் கழிவுகள் பற்றிய புள்ளி விவரங்கள் படிவம் 2-ல் பதிவு செய்யப்பட்டு பராமரிக்க வேண்டும். மின் மற்றும் மின்னணுப் பொருள்களை தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்று விற்பனை செய்வோர், விற்பனை செய்யப்பட்ட பொருள்களின் ஆயுள்காலம் முடிந்தவுடன் அதனை நுகர்வோரிடமிருந்து மீண்டும் திரும்பப் பெறும் வகையில், மின்னணுக் கழிவுகளை சேகரிப்பதற்கான பெட்டி அல்லது தொட்டி அல்லது குறிப்பிட்ட இடத்தில் ஒப்படைப்பு செய்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்.

சேகரிக்கப்பட்ட மின்னணுக் கழிவுகள் தயாரிப்பாளர்களால் நியமிக்கப்பட்ட சேகரிப்பு மையங்கள் அல்லது பிரித்தெடுக்கும் அல்லது மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வேண்டும்.

Post a Comment

0 Comments