அமரடக்கி அருகே வெளியாத்தூர் கிராமத்தில் 20 பேர் காய்ச்சலால் பாதிப்பு..டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்..!!!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமரடக்கி ஊராட்சிக்குட்பட்ட வெளியாத்தூர் கிராமத்தில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இங்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்து பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவரும் அருகே உள்ள ஆவுடையார்கோயில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு தொடர்ந்து சிகிச்சை பார்க்க முடியாது என்று கூறவே, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அந்த கிராமத்திலிருந்து சுமார் 20 -க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகக் கூறி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.

அந்தக் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து நேரடியாகச் சென்று விசாரித்தோம். பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வீடுகளுக்கு அருகே கிடக்கும் பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய் சிரட்டை, டயர்கள் என அனைத்தையும் முழு வீச்சில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுவந்தன. சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.


சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் 20 -க்கும் மேற்பட்டோருக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நோய் பரவுவதற்கு முன்பு சுகாதாரத்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள். இதுபற்றி, வெளியாத்தூரைச் சேர்ந்த காளியம்மாள் கூறியதாவது, ``தனியார் மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்திட்டு, உடனே எந்தக் காய்ச்சல்னு சொல்லி அதற்கான சிகிச்சை கொடுக்கிறாங்க. ஆனா, அரசு மருத்துவமனையில என்ன சிகிச்சை கொடுக்கிறாங்க'னு தெரியலை. என்ன காய்ச்சல்னு சரியாகச் சொல்ல மாட்றாங்க.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

எல்லாத்துக்கும் சாதாரண காய்ச்சல்தான். மாத்திரை சாப்பிட்டாலே சரியாகப் போயிடும்னு சொல்றாங்க. ஒரு குடும்பத்த எடுத்துக்கிட்டா எல்லாருக்கும் காய்ச்சல் வந்திடுது. என் மகளுக்குக் காய்ச்சல் இருந்துச்சு. ஒருவாரமாக மருத்துவமனையில் வச்சிருந்தோம். இப்போ நல்லாயிருச்சு. எங்க ஏரியாவுலயே பலருக்கும் காய்ச்சல். நோய் பரவி 2 வாரத்துக்கும் மேல ஆகுது. ஆனாலும், நோய் பரவ ஆரம்பிச்ச பிறகுதான் அதுவும் கண்துடைப்பாக சுகாதாரப் பணிகள் செய்யுறாங்க. இனியாவது, தொடர்ந்து காய்ச்சல் இங்கு பரவாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுபற்றி சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்களிடம் பேசினோம், ``அனைவருக்கும் சாதாரண காய்ச்சல்தான். ஆனாலும், சுகாதாரப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் தினமும் நடக்கிறது. நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது. பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததுதான் இதுபோன்று காய்ச்சல் உருவாக முக்கிய காரணம். ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் 5 மூட்டை வரையிலும் பிளாஸ்டிக் பொருள்கள், டயர் அட்டை உள்ளிட்டவற்றை அகற்றிச் சுத்தப்படுத்தியுள்ளோம். பொதுமக்களே தங்கள் வீட்டைச் சுற்றிலும் சுத்தம் செய்வதற்கு முன்வர வேண்டும். விரைவில் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும்" என்கின்றனர் உறுதியாக.

நன்றி: விகடன்
Source: https://www.vikatan.com/news/tamilnadu/dengue-rapidly-spreads-in-pudukottai-district

Post a Comment

0 Comments