ஓமன் நாட்டில், மீன்பிடிக்க சென்ற நம்புதாளை மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் மாயம்



ஓமன் நாட்டில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற நம்புதாளை மீனவர்கள் 4 பேர் மாயமாகிவிட்டனர். இதுதொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்களான கார்மேகம்(வயது 50), ராமநாதன்(38), கே.காசிநாதன்(36), ஆர்.காசிலிங்கம்(23) ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவு பகுதியில் இருந்து கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் 4 பேரும் வழக்கம்போல் கடந்த 16-ந்தேதி பேர் ஒரு படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

 அவர்களுடன் மேலும் 4 பேர் சென்றனர். ஒரு வாரத்தில் கரை திரும்ப வேண்டிய அவர்கள் 10 நாட்களாகியும் கரை திரும்பவில்லையாம்.

அந்த மீனவர்கள் புயலில் சிக்கி நடுக்கடலில் மாயமாகி இருக்கலாம் என்று அந்த நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அறிந்த ஓமனில் வேலை செய்து வரும் நம்புதாளையை சேர்ந்தவர்கள் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த மீனவர்களின் குடும்பத்தினர் கடலுக்கு சென்ற மீனவர்களின் கதி என்ன என்பதை அரியமுடியாமல் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து நம்புதாளை கிராம மக்கள் சார்பில் கல்கண்டு, முத்துராக்கு, ஆறுமுகம், காளிதாஸ் ஆகியோர் ஓமன் நாட்டில் நம்புதாளை மீனவர்கள் 4 பேர் மாயமானது குறித்து மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாயமாகியுள்ள மீனவர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகங்களுக்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தமிழக முதல்-அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments