5 வருடங்கள் இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார சரிவு… நாட்டின் GDP 5 சதவீதமாக குறைந்தது..!நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜிடிபி வழுக்கி விழுந்து உள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில் முதல் முறையாக இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவு இன்று மாலை வெளியிடப்பட்டது. அதில்தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

கடந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காலக்கட்டத்தில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், இந்திய பொருளாதாரம் மந்தமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இது மீளத் தக்கது எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரு வாரங்களாக புதிதாக பட்ஜெட் அறிவிப்பு போல பல நிதி நிலை அறிவிப்புகளை பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்து வருகிறார். இதற்கு பலன் கிடைக்குமா என்பதை அடுத்த காலாண்டு இறுதியில்தான் பார்க்க வேண்டும்.

நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், நீண்ட கால பொருளாதார மந்தநிலையின் மத்தியில் நாம் இருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Post a comment

0 Comments