புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம்..உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள், பதாகைகள் வைப்பவர்கள் மீதும், விதிமீறுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஓராண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:
 
சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளின் வழிகாட்டுதலின்படி அனுமதியின்றி விளம்பர பலகைகள், பதாகைகள் வைப்பவர்கள் மீதும், விதி மீறுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விளம்பர பலகைகள், பதாகைகள் நிறுவ அனுமதி விதிகள், 2011 மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920ன்படி, 

கல்வி நிறுவனங்கள் முன்பு, வழிபாட்டு தளங்கள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு கொண்ட மருத்துவமனைகள் முன்பு, சாலை அல்லது தெரு சந்திப்புகளின் மூலைகளில், சந்தியின் இருபுறமும் 100 மீட்டர் தூரத்திற்குள் மற்றும் சிலைகள் அல்லது நினைவு சின்னங்கள் முன்பாகவும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் விளம்பர பதாகைகள், பலகைகள், விளம்பர அட்டைகள் வைக்கக்கூடாது.

அனுமதிக்கப்பட்ட இடங்களில் விதிகளுக்கு உட்பட்ட அளவுகளில் மட்டுமே விளம்பர பலகைகள், பதாகைகள் அமைக்க வேண்டும். மேலும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள், பதாகைகள், விளம்பர அட்டைகளை உரிய அலுவலர்கள் அகற்றி அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட வைப்பவர்களிடம் வசூலிக்கப்படும்.

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920 மற்றும் தமிழ்நாடு சட்டம் 2011-ல் 2, சேர்க்கை பிரிவு 285ஐ மற்றும் தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2000 (தமிழ்நாடு சட்டம் 2000 -இல் 26) ன்படி உரிய அலுலவரிடமிருந்து அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள், பதாகைகள், விளம்பர அட்டைகள் நிறுவும் நபர்கள் மீது ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments