அறந்தாங்கியில் பரபரப்பு: மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்த 137 பவுன் நகைகள் கொள்ளை தொழுகைக்கு சென்றவரின் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை




அறந்தாங்கியில் தொழுகைக்கு சென்றவரின் வீட்டில் 137 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சிறப்பு தொழுகை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அப்துல்ஹமீது 4-வது தெருவை ேசர்ந்தவர் காஜா நஜிமுகைதீன். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புர்கான் பேகம் (வயது 56). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் முதல் மகளுக்கு திருமணம் நடந்து அவர் தனியாக வசித்து வருகிறார். 2-வது மகளின் திருமணத்திற்காக வரன் பார்த்து கொண்டிருந்தனர். அதற்காக தங்க நகைகளும் வாங்கி வீட்டில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகைக்காக புர்கான் பேகம் தனது மகளுடன் வீட்டை பூட்டிவிட்டு அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றார்.

137 பவுன் நகைகள் கொள்ளை

அங்கு தொழுகை முடிந்தவுடன் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டுஉடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 137 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றைமர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புர்கான் பேகம் அறந்தாங்கி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதற்கிடையே புதுக்கோட்டையில் இருந்து மோப்ப நாய் தீரன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்தவீட்டில் இருந்து ஆவுடையார்கோவிலில் உள்ள ரெயில்வே கேட் வரை சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர் கார்த்திகா தலைமையில் அதிகாரிகள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து புர்கான் பேகம் அறந்தாங்கி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அறந்தாங்கியில் வீட்டின் பூட்டை உடைத்து 137 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவரிங் நகையால் ஏமாற்றம்
கொள்ளை சம்பவம் நடந்த அதே தெருவில் வசித்து வருபவர் கிரீன் முகமது (58). இவரது வீட்டில் உள்ளவர்களும் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றிருந்தனர். இவரது வீட்டிலும் மர்மநபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளை திருடி உள்ளனர். பின்னர் அவற்றை சோதனை செய்து பார்த்தபோது, கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த மர்மநபர்கள் ஆத்திரத்தில் அந்த கவரிங் நகைகளை 100 மீட்டர் தொலைவில் தூக்கி எறிந்து விட்டு தப்பி சென்றது தெரியவந்து உள்ளது. அவற்றை போலீசார் மீட்டு கிரீன் முகமதுவிடம் ஒப்படைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments