உயிரை கொல்லும் டெங்கு காய்ச்சல்..! தப்புவது எப்படி?



தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவு என சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில், உயிரைக் கொல்லும் டெங்கு காய்ச்சல் வராமல் காப்பது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியதும் டெங்குவின் தாக்கமும் தொடங்கி இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்தாண்டு டெங்கு கொசுக்களின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக பொது சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் 4,177 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 13 பேர் உயிரிழந்ததாகவும் அறிக்கை வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை. இந்த ஆண்டு இதுவரை 1,750 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சல் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகவும் அவர்களில் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக தலைவலி, சளி இருமல் இருந்தாலோ குழந்தைகளின் உடலில் அலர்ஜி ஏற்பட்டது போன்று சிவப்பு நிற தடுப்புகள் காணப்பட்டாலோ உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.

மழை நீர் தேங்கும் இடங்கள், பிரிட்ஜ்-க்கு பின்புறம் நீர் தேங்கும் இடங்களில் உற்பத்தியாகும் டெங்கு கொசுக்கள் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் தன்மை கொண்டவை. பகல் நேரத்தில் கொசுக்களின் நடமாட்டம் இருந்தால் வீட்டிற்குள்ளோ அல்லது வீட்டை சுற்றிய பகுதியிலோ உள்ள பழைய டயர், உடைந்த பானை, பாட்டில், மணி பிளாண்ட், பிளாஸ்டிக் கவர், இளநீர் மற்றும் தேங்காய்க் கூடு ஆகியவற்றை அகற்றி டெங்கு கொசுவின் வாழ்விடத்தை உடனடியாக அழிக்க வேண்டும்.

தமிழக பொது சுகாதாரத் துறையும், உள்ளாட்சித் துறையும் இணைந்து தொடர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 360 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்துள்ளது. மழை நீர் தேங்கி டெங்கு பரவக் காரணமாக இருந்ததாக, வணிக வளாகங்கள்- வீடுகள் ஆகியவற்றில் 27 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் தீவிரமாக மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது

அனைத்து அரசு மருத்துவமனைகளும் டெங்கு சிறப்பு சிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளதாகவும், ஒன்றரை லட்சத்துக்கு கீழ் ரத்த தட்டணுக்கள் சென்றால் மட்டுமே ஆபத்தான நிலை என்றும், டெங்கு தாக்குதலுக்குள்ளாகி ரத்த தட்டணுக்கள் குறைபாட்டால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க போதுமான ரத்தம் கையிருப்பு உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார்.

வாரம் மூன்று முறை நிலவேம்புக் கசாயம் குடித்தால் கொசு கடித்தாலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாது என்று சொல்லப்பட்டாலும் வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் மழைநீர் தேங்காமல் முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டாலே கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி டெங்கு காய்ச்சலைத் தடுக்கலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments