புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்றுநோய் ஒழிப்பு பணிகளில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.!!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பொதுசுகாதாரத்துறை சார்பில் தொற்றுநோய் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மழைக்காலம் துவங்கியுள்ளதால் நீர் மற்றும் கொசுக்கள் மூலம் தொற்றுநோயை பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித்துறையின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை சுத்தமாக வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து மேல்நீர்த்தேக்க தொட்டிகளையும் சுத்தம் செய்வதுடன் குடிநீரை சுத்திகரிக்க செய்து தினமும் குளோரின் கலந்து சுத்தமாக வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொசுக்கள் பரவாமல் தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவும், பொதுசுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான மருந்துகள் கையிருப்பில் வைத்திருப்பதுடன் களப்பணியாளர்கள் மூலம் நோய் கண்காணிப்பு பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பகுதிகளில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களால் பாதிக்கப்படும் நிலை இருந்தால் உடனடியாக பொதுசுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் 04322-221733 என்ற எண்ணிற்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் எவ்வித தொற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சந்திரசேகரன், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன், பொது சுகாதாரத்துணை இயக்குநர்கள் மரு.பரணிதரன், மரு.கலைவாணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments