மணமேல்குடி அருகே போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது கஞ்சா, துப்பாக்கி பறிமுதல்




மணமேல்குடி அருகே போலி சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

போலி அடையாள அட்டை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பரோஸ்கான் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரியா மற்றும் போலீசார் கீழமாந்தாங்குடி பிரிவு சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், அவர் தான் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அடையாள அட்டையை எடுத்து காண்பித்தார்.

இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசன் மகன் பிரித்விராஜ் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த அடையாள அட்டையில் புதுக்கோட்டை விரல்ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது போலியான அடையாள அட்டை என்பது கண்டறியப்பட்டது.

கஞ்சா, துப்பாக்கி பறிமுதல்

இதைத்தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது அதில் கஞ்சா பொட்டலங்களும், பிஸ்டல் போன்ற ஏர்கன் துப்பாக்கியும் இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த கஞ்சா பொட்டலங்களையும், துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து மணமேல்குடி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவர் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் மொத்தம் 1¼ கிலோ இருந்தது.

மேலும் இந்த வழக்கில் பிருத்விராஜுக்கு உடந்தையாக இருந்த கிருஷ்ணாஜி பட்டினம் பகுதியை சேர்ந்த பாதுஷா என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டதாரி வாலிபர்

இந்த கைது சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், கைதான பிருத்விராஜ் ஒரு பட்டதாரி ஆவார். அவர் டியூஷன் நடத்தி வருகிறார். அவரிடம் பல மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பிருத்விராஜ் தன்னை விரல்ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி மணமேல்குடி போலீஸ் நிலையத்திற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் இவர் கஞ்சாவை வாங்கி விற்பனையில் ஈடுபடுவதும், பயன்படுத்துவதாகவும் தகவல் வந்தது. அந்த அடிப்படையில் வாகன சோதனையின் போது அவர் சிக்கினார். இவர் கஞ்சா பொட்டலங்களை திருச்சி, தேனியில் இருந்து வாங்கி வந்ததாக கூறி வருகிறார். கஞ்சாவை அவர் எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments