காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனையின்றி மருந்து வாங்கி உட்கொள்ள கூடாது கலெக்டர் வேண்டுகோள்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனையின்றி நேரடியாக மருந்து கடைகளில் மருந்து வாங்கி உட்கொள்ள கூடாது என கலெக்டர் உமா மகேஸ்வரி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காய்ச்சல் மற்றும் இதர தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், பருவகால மாற்றத்தினால் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து உள்ள தண்ணீர் தொட்டி, குடம், வாளி ஆகியவற்றில் உள்ள நல்ல நீரில் கொசுக்கள் முட்டை இடா வண்ணம் மூடி வைப்பதுடன், வாரம் இருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாக கழுவி காய வைத்தபின், மீண்டும் தண்ணீர் பிடிக்க வேண்டும்.

மேலும் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் உள்ள பிளாஸ்டிக் நீர்வடிதட்டில் உள்ள நீரை வாரம் இருமுறை கண்டிபாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் பயன்படுத்தாத குடம், பானை, தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், டயர்கள், ஆட்டுக்கல், உரல் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். குடிநீரை காய்ச்சி நன்கு கொதிக்க வைத்து, ஆறவைத்து குடிக்க வேண்டும். தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் பணியினை மேற்கொள்ள தங்கள் வீடுதேடி வரும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

4 நாட்கள் ஓய்வு :

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து கடைகளில் நேரடியாக மருந்து வாங்கி உட்கொள்வதோ, முறையான பயிற்சி பெறாத மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதோ, காய்ச்சலுக்கு ஊசிபோட்டுக்கொள்வதோ கூடாது. அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெறுபவர்கள் காய்ச்சல் குறைந்தவுடன், மருத்துவமனையை விட்டு வெளியேறாமல், காய்ச்சலுக்கு பின் மேலும் 4 முதல் 5 நாட்களுக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற வேண்டும்.

காய்ச்சல் நின்றபிறகு 3 நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ, மீண்டும் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். வேலைக்கு செல்வோரும், காய்ச்சல் நின்றபிறகு குறைந்தது 4 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். காய்ச்சல் கண்டவர்கள் கொசு வலைக்குள் ஓய்வும், உறக்கமும் கொள்ள வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் போதுமான அளவிற்கு உப்பு சர்க்கரை கரைசல், பழச்சாறுகள், கஞ்சி, இளநீர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும்.

காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள்:

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. டெங்கு காய்ச்சலுக்காக சிறந்த ரத்த பரிசோதனை முறையான எலிஸா ரத்த பரிசோதனை வசதி அரசு மருத்துவமனைகளில் உள்ளது. காய்ச்சல் கண்டவர்களுக்கு 45 வினாடிகளில் முடிவு தெரியும். செல்கவுண்டர் வசதிகள் அரசு மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 தாலுகாக்களிலும் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்படுகின்றது. மேலும் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள் மட்டும் 490 பேர் இதற்கென பணியமர்த்தப்பட்டு டெங்கு கொசுப்புழு ஒழித்தல் மற்றும் புகை மருந்து அடிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments