டிச.2 ல் தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புதமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி, டிசம்பர், 2ல் அறிவிக்கப்படும் என்றும், டிச.13க்குள் தேர்தல் தொடர்பான விபரங்கள், நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்றும், மாநில தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக, வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயசுகின் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக பதில் அளிக்குமாறு, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியிருந்தது. இது தொடர்பாக, இரு தரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டது. பின், ஜூலை 15-ல், தமிழக தேர்தல் ஆணையம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலை நடத்த தாமதம் ஏற்படுவதற்கு, மாநில தேர்தல் ஆணையம் காரணமல்ல. லோக்சபா தேர்தலை நடத்தியதன் காரணமாக உருவான சூழலால்தான், உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டது'.

'இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவை, மாநிலத் தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. இருப்பினும், மேற்கண்ட காரணத்தால் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிக்கையை வெளியிடுவதற்கு, 60 நாள்கள் தாமதமாகும்; எனவே, தேர்தலை நடத்த, அக்டோபர், 31 வரை அவகாசம் தேவை' என, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து, தேர்தலை அக்டோபர் இறுதிக்குள் நடத்துமாறு, ஜூலை 17-ல், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில், இடைக்கால மனுவை சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில், 'உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம், தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், தேர்தலில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை பரிசோதனை செய்ய வேண்டிய 'பெல்' எனப்படும், பாரத் மின்னியல் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர், மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் இருப்பதால், அங்கு தேர்தல் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு, அக்டோபர், 28ல் திரும்புவார்கள் என்று 'பெல்' நிறுவனத்தின் உயரதிகாரி, கடிதம் மூலம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த, மேலும் நான்கு வார காலம் அவகாசம் அளிக்கவும், டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிடவும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அடுத்த மாதம் 2ம் தேதி, தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும். டிச. 13க்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விபரங்கள், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்' என, தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments