எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல! - புதுக்கோட்டை பெண்ணுக்கு அமெரிக்காவிலிருந்து உதவிக்கரம்



சோசியல் மீடியாக்கள் என்று அழைக்கப்படும் சமூக ஊடகங்கள் மனித சமூகத்தின் வரமா, சாபமா என்ற விவாதங்கள் அடிமட்டத்திலிருந்து அறிவார்ந்த மனிதர்கள்வரை தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால் ஆன்லைன் என்பவை அன்பின் விளைநிலம். உதவிகளின் ஊற்று. நட்பின் நாற்றங்கால். அறிவின் தேடல். அவரவரின் செயல்பாடுகளைப் பொறுத்தே அனைத்தும் அமையும்.

அதற்கு ஆன்லைனும் விதிவிலக்கல்ல! எனவே, எதிர்மறைச் செயல்கள் ஆன்லைனில் எட்டியே நிற்கட்டும். நேர்மறை நிகழ்வுகளை மட்டும் நெஞ்சம் குளிர வரவேற்போம். எனக்கு அப்படியான ஒரு இனிய அனுபவம். அதை இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன்.

நான் உணர்ந்தவற்றை, எனக்கு உறுத்தல் ஏற்படுத்தியவற்றை, மகிழ்ந்ததை, மன்றாடியதை, கோபப்பட்டதை, குளிர்ந்ததை இப்படியான என் சிந்தனைகளின் எல்லா வடிவங்களுக்கும் எழுத்து முலாம் பூசி இதழ்களிலும் பத்திரிகைகளிலும் ஆன்லைன்களிலும் அவ்வப்போது உலவவிடுவது உண்டு. அதற்கான முடிவுகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்போது அதைவிட பெரிய சந்தோசம் வேறு என்ன இருந்துவிடப்போகிறது? எழுத்தின் கொண்டாட்டம் அங்கேதான் பரவசம்! அதுதான் எழுத்துக்குக் கிடைக்கும் உண்மையான வெகுமதி..!


புதுக்கோட்டை - சத்தியமூர்த்தி நகரில் அயர்னிங் கடை நடத்திவருபவர் உமா. இவரின் பொருளாதாரத் துயரை நீக்கி அவர் செய்துகொண்டிருந்த தொழிலில் ஏற்பட்ட தடைகளை உடைத்து காலத்தால் உதவி செய்த மூன்று நல்ல உள்ளங்கள் - புதுக்கோட்டை ஆசிரியையும் கவிஞருமான மு.கீதா, பேராசிரியர் தசா.விஸ்வநாதன், விதைக் ‘கலாம்’ அமைப்பின் முக்கிய விழுதும் ஆசிரியருமான ஸ்ரீ மலையப்பன் ஆகியோர். இவர்கள் உமாவுக்கு காலத்தால் செய்த உதவி குறித்து விகடன்.காமின் ‘MY VIKATAN’–க்கு செய்தி அனுப்பி இருந்தேன். இது, அக்டோபர் 9-ம் தேதி அன்று. ‘இது கடனில்லை, உதவி! 3 பிள்ளைகளுடன் தவித்த பெண்ணுக்கு வாழ்வு கொடுத்த 3 பேர்’ என்ற தலைப்பில் ‘மை விகடனில்’ செய்தியும் வெளியானது. இது விகடன் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து அண்ணாத்துரை கோவிந்தசாமி என்பவர் சில நாள்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மெசஞ்சரில் தொடர்புகொண்டார். என்னுடன் பேச வேண்டும் என என்னுடைய தொடர்பு எண் கேட்டிருந்தார். நானும் பதிவிட்டேன். சில நிமிடங்களிலேயே என்னுடன் பேசினார்.

`சார் நான் அண்ணாத்துரை. சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. இப்போ கலிபோர்னியாவிலிருந்து பேசுறேன். நானும் விகடன் ஸ்டூடன்ட் ரிப்போர்ட்டரா காலேஜ் டைம்லே இருந்தவன். அப்புறம் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு அமெரிக்கா வந்துட்டேன். விகடன்.காம்மை தொடர்ச்சியா வாசிக்கிறேன். நான் விகடனின் தீவிர வாசகன்.

அதுலே நீங்க எழுதி இருந்த புதுக்கோட்டை அயர்னிங் கடை உமா தொடர்பான செய்திக் கட்டுரை என்னை ரொம்ப நெகிழ வைச்சிடுச்சு சார். அதைப் படிச்சிட்டு உங்கக்கிட்டே உடனே பேசணும்னு விரும்பினேன். இன்னைக்குதான் உங்களை ஃபேஸ்புக் மெசஞ்சரில் பிடிக்க முடிஞ்சது. ஒருவரோட துயரத்தைப் போக்க அவங்க செய்யுற உதவியின் அளவு சிறியதா இருந்தாலும் சரியான நேரத்தில் செய்யப்படுற உதவி ரொம்ப பெருசு சார். உதவி செய்த அந்த மூன்று பேருக்கும் என்னோட பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சொல்லுங்க சார்.

அப்புறம் அந்த அம்மா உமா, கடையாக வைச்சிருக்கிற தள்ளுவண்டிக்குத் தினசரி வாடகை கொடுத்து வர்றாங்கன்னு நீங்க அந்தச் செய்தியிலே எழுதி இருந்தீங்க. அவங்க வருமானமே 300 ரூபாய். அதுலே இந்த வண்டிக்கும் வாடகை கொடுத்திட்டா என்ன சார் மிஞ்சும்? பாவம்..! அந்த அம்மா உமாவுக்குத் தள்ளுவண்டியை நான் என் சொந்தச் செலவிலே வாங்கிக் கொடுத்திடுறேன். அந்த வாடகைப் பணம் மிச்சம் ஆகட்டும். அது அவங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும். அந்த வண்டி என்ன விலை ஆகும்னு கேட்டுச் சொல்லுங்க சா.ர்.. ” என்ற அண்ணாத்துரையின் வார்த்தைகளில் நான் நெகிழ்ந்துபோனேன்.

உடனே இந்த மகிழ்ச்சியை உமாவின் தொழிலுக்குத் தொடக்கப் புள்ளியாக இருந்த கீதா டீச்சருக்குத் தெரியப்படுத்தினேன். அவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. புதிய வண்டி வாங்குவதற்காகப் பல்வேறு இடங்களிலும் கொட்டேஷன் கேட்டோம். கடைசியில் உமாவே ஒரு பழைய வண்டியைத் தேர்வு செய்து அதுவே போதும் என்றார். ஆனால், அந்த வண்டியின் ஆயுள் எவ்வளவு காலம்? என்பது கேள்விக்குறியாக இருந்தது. எனவே, புது வண்டி செய்வதற்கு ஆகும் செலவைத் தொடர்ந்து விசாரித்ததில் ஒரு வொர்க் ஷாப்காரர்கள் ரூ.10,450/-க்கு செய்து கொடுக்க முன்வந்தனர். இதுபற்றி அண்ணாத்துரையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்ஜெட் கூடுதலாக இருக்கிறதே என்ன சொல்லுவாரோ? எனத் தயங்கித் தயங்கி அவருக்கு மெயில் அனுப்பினேன். ஆனால், அவரோ 15,000 ரூபாய் அனுப்பி வைப்பதாகவும், வண்டிக்குப்போக மீதம் உள்ள ரூ.4,550-ஐ உமாவின் குழந்தைகள் படிப்புக்காகவும் அவசரச் செலவுகளுக்கும் கொடுத்துவிடுங்கள் என மகிழ்ச்சியுடன் மெயில் அனுப்பி இருந்தார்.

அவருடைய பெருந்தன்மை கண்டு நான் பூரித்துப்போனேன். உடனேயே கீதா டீச்சரின் வங்கிக் கணக்கு எண் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கணக்கில் ரூ.15,000-த்தை அண்ணாத்துரை செலுத்தினார். உடனே வொர்க் ஷாப்காரர்களிடம் அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டு வண்டி செய்வதற்கான வேலையும் தொடங்கியது. ஒரு வார காலத்தில் புதுவண்டியைச் செய்து தருவதாக உறுதி அளித்தார்கள். அதன்படியே வண்டியும் தயாரானது.

ஆரம்பத்தில் உதவிக்கரம் நீட்டிய ஆசிரியை கவிஞர் மு.கீதா, ஆசிரியர் ஸ்ரீமலையப்பன் ஆகியோரின் கரங்களால் இந்தப் புதுவண்டியும் தொகை ரூ.4,550/-ம் உமாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த உதவியைப் பெற்றுக்கொண்ட உமாவுக்கு வார்த்தைகளே வரவில்லை. ``என்னை யார்னே தெரியாம என் சூழ்நிலையை விகடனிலே படிச்சு தெரிஞ்சிக்கிட்டு எங்கோ ஒரு நாட்டிலே இருந்து எனக்கு இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கிற அந்த அண்ணாத்துரை சாருக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. அவரும் அவங்க குடும்பமும் நல்லா இருக்கணும்... இந்த உதவியை எப்பவும் மறக்க மாட்டேன். நல்ல மனசு உள்ளவங்களோட உதவியால் கிடைச்ச இந்தத் தள்ளுவண்டி, சலவைப்பெட்டி இதை வைச்சு என் பிள்ளைகளை நல்லபடியா படிக்க வைச்சு குடும்பத்தைக் காப்பாத்திடுவேன். பிள்ளைகளை நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்திடுவேன். அதுக்கு முழு தைரியமும் தன்னம்பிக்கையும் எனக்கு இப்போ கிடைச்சிருக்கு. இதுக்குக் காரணமா இருந்த கீதா டீச்சர், அவங்களோட நண்பர்கள் விஸ்வநாதன் சார், மலையப்பன் சார் அப்புறம் அண்ணாத்துரை சார், விகடன் இவங்களை எல்லாம் என்னாலே வாழ்க்கையிலே மறக்கவே முடியாது...” எனக் கண்ணீர் மல்க நெகிழ்ந்துபோகிறார் உமா.

உமாவுக்கு தான் செய்த உதவிகள் பற்றி தன் பெயரையோ, படத்தையோ வெளியில் பகிர வேண்டாம் என்று அண்ணாத்துரை பலமுறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். இருந்தும் திரும்பத் திரும்ப நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அவருடைய பெயரைப் பதிவு செய்துகொள்ள அனுமதித்தார். ``உமாவின் பிள்ளைகளும் குடும்பமும் நல்லா இருந்தால் போதும். இது ஒண்ணும் பெரிய உதவி இல்லை சார். சிரமப்படும் சக மனிதர்களுக்கு நம்மால் செய்ய முடிந்த ஒரு சின்ன உதவி இது. உமாவின் தன்னம்பிக்கைக்கும் அவங்க பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்துக்கும் இது ஒரு சின்ன சப்போர்ட். அவ்வளவுதான்..” என்று தன்னடக்கத்துடன் கூறுகிறார் அண்ணாத்துரை.

இதுபோன்ற உதவும் எண்ணம் கொண்ட நல்ல மனிதர்கள் சூழ் வாழும் உலகில் நாமும் வாழ்கிறோம் என்பதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்?

உதவிய நல்ல உள்ளங்களுக்கும்... நல்ல விஷயங்களை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் `மை விகடனுக்கும்’ நன்றிகள் என்றென்றும்..!

நன்றி :- விகடன்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments