மணமேல்குடி பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்: நோயாளிகள் வருகையால் திணறும் அரசு மருத்துவமனை



மணமேல்குடி பகுதிகளில் தொடர்ந்து மர்ம காய்ச்சல் பரவி வருவதால் அரசு மருத்துவமனையில் கூட்டம் அலைமோதுகிறது. மருத்துவர்கள் உள்பட மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறையினால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது.இங்கு மணமேல்குடி ஒன்றியத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தற்போது மணமேல்குடி பகுதிகளில் வேகமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனையை நம்பியுள்ளனர்.

இங்கு இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

ஆனால் ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சைக்காக வருகின்றனர். தற்போது அதிகமான மக்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த காய்ச்சலை தொடர்ந்து சிலருக்கு வாந்தி ஏற்பட்டு உடலில் தண்ணீர் சத்து குறைகிறது. இந்த காய்ச்சல் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை குணமாகாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் அதிகமான மக்களுக்கு ரத்தத்தில் தட்டணுக்கள் அதிக அளவு குறைந்து ஆபத்தான நிலைக்கு செல்கின்றனர். இங்குள்ள மருத்துவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அல்லது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு பரிந்துரை செய்கின்றனர்.

இங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் படுக்கை கிடைப்பதில்லை. இதனால் ஒரே படுக்கையில் 2 நோயாளிகளை படுக்க வைத்து குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.

மேலும் குளுக்கோஸ் ஸ்டாண்ட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நீளமான கயிற்றை கட்டி அதன் மூலம் குளுக்கோஸ் பாட்டிலில் தொங்கவிடப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் இரத்த அணுக்கள் பரிசோதனை செய்ய லேப் டெக்னீசியன் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.

அவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் இருப்பதால் இரத்த அணுக்கள் பரிசோதனை செய்ய முடியாமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனால் பலர் தனியார் மருத்துவமனையை நாடிச் சென்று பரிசோதனை செய்கின்றனர். இதனால் நோயாளிகளுக்கு மிகுந்த அலைச்சலும், வீண் விரயமும் ஏற்படுகிறது. அரசு மருத்துவமனையில் கழிவறை உள்ளிட்ட சில பகுதிகள் அசுத்தமாக இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் நோயாளிகள் கொசுக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனை இருளில் மூழ்கிக் கிடப்பதால் நோயாளிகளும், உறவினர்களும் கடும் துன்பத்திற்குள்ளாகின்றனர்.

எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமித்தும், செவிலியர்கள், லேப் டெக்னீசியன் போன்ற மருத்துவ பணியாளர்களை போதிய அளவில் நியமித்தும், சிகிச்சைக்காக வரும் உள் நோயாளிகளுக்கு புதிதாக படுக்கை வசதிகளை அமைத்து, ரத்த தட்டணுக்கள் குறைந்தாலும் இங்கேயே சிகிச்சை பெறும் அளவிற்கு மருத்துவ சிகிச்சை முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: தினகரன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments