அறந்தாங்கியில் பெண் டிஎஸ்பி பணியிட மாற்றத்துக்கு எதிராகக் கொதித்த மக்கள்..!



தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்துவந்த 50 டிஎஸ்பி -களைப் பணியிட மாற்றம் செய்து, தமிழகக் காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், அறந்தாங்கி டிஎஸ்பி-யாகப் பணிபுரிந்துவந்த கோகிலா, திருச்சி ஜீயர்புரம் சரக டிஎஸ்பி-யாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் குற்றப்பிரிவு டிஎஸ்பி -யாகப் பணிபுரிந்துவந்த பாலமுருகன், அறந்தாங்கி டிஎஸ்பி-யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலாவை பணியிட மாற்றம் செய்த காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்தும், அவரை அறந்தாங்கியை விட்டு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தியும், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். திடீரென நடைபெற்ற போராட்டத்தால், அங்கு- சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அறந்தாங்கி டிஎஸ்பி-யாகப் பணிபுரிந்த கோகிலா, சமீபத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக, அவர் காவல் எல்லைக்குட்பட்ட  காவல் நிலையங்களில் நடைபெறும் குற்றச் செயல்களை முற்றிலுமாகக் குறைத்தார். குறிப்பாக, கஞ்சா, போதை மாத்திரை விற்பனை, திருட்டு மணல் அள்ளுவது, கள்ளத்தனமாக மது விற்பனை, லாட்டரி போன்றவற்றைத் தடுத்து நிறுத்தினார். மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


இதுபற்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கூறும்போது, "டிஎஸ்பி-யாக கோகிலா மேடம் பொறுப்பேற்ற பிறகு அறந்தாங்கியில் பெரும்பாலான குற்றச் சம்பவங்கள் குறைந்திருக்கிறது. சமீபத்தில் போதை மாத்திரைகளால் அடிமையாகிவந்த இளைஞர்களை அதிலிருந்து மீட்க, போதை மாத்திரை விற்பனை செய்த கும்பலைக் கூண்டோடு அதிரடியாகக் கைதுசெய்தார்.

மேலும், குற்றச் சம்பவங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த அடுத்தடுத்த திட்டங்களைச் செயல்படுத்திவந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் பணியிட மாற்றம் கொடுத்துள்ளது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி டிஎஸ்பி-யின் பணியிட மாறுதலை ரத்துசெய்ய வேண்டும்" என்றனர்.

நன்றி: விகடன்


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments