புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 137 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுப்பு கலெக்டர் பேட்டி



புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 137 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே உள்ள அரசினர் கல்லூரி மாணவிகள் விடுதி 5 உள்ளது. இந்த விடுதிகள் வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால் இந்த விடுதியில் தங்கி மாணவிகள் தினமும் கல்லூரிக்கு போகும்போது மழைநீரில் நடந்து சென்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து மோட்டார்கள் உதவியுடன் மழைநீரை அகற்றும் பணி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார். அப்போது மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், கழிவறை போன்றவற்றை ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்பொழுது பரவலாக பெய்து வருகிறது. இந்த ஆண்டு சராசரி மழையளவு 897 மில்லி மீட்டர் ஆகும். வடகிழக்கு பருவமழை துவங்கிய இரு மாதங்களில் மாவட்டத்தில் 436 மில்லி மீட்டர் மழையளவு பெறப்பட்டுள்ளது. இது ஆண்டு சராசரி மழையளவை காட்டிலும் 65 மில்லி மீட்டர் கூடுதலாகும்.

பள்ளிகளை மேம்படுத்த

மணமேல்குடி தாலுகாவில் உள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் பிள்ளையார்திடல் ஆகிய 2 இடங்களில் அமைந்து உள்ள நிவாரண முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி போன்றவை அளிக்கப்பட்டது. தற்போது, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிய தொடங்கி உள்ளதால் அவர்களது இல்லத்திற்கு திரும்பி உள்ளனர். மழைக்காலங்களில் பொது மக்கள் காய்ச்சிய குடிநீரை மட்டுமே பருக வேண்டும்.

மாணவிகள் விடுதி பகுதியில் தொற்றுநோய்கள் பரவாத வகையில் அனைத்து பகுதிகளிலும் பிளிச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை மேம்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் மாணவ, மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை மூலம் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கல்லூரி விடுதி மாணவிகள் உணவின் தரம் உள்ளிட்ட புகார்கள் தெரிவிக்க தனியாக செல்போன் எண் வழங்கப்பட்டு உள்ளது.

கணக்கெடுக்கும் பணி

இதில் வரும் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 137 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை சார்பில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார். இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பவானி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ்ச்செல்வன், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments