சென்னையில் மமக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற காரணமாக இருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி வீடு முற்றுகை..!



சென்னையில் மமக சார்பில் முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.


குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தில் மத்திய அரசை எதிர்த்தும், மசோதா நிறைவேற முக்கிய காரணமாக அமைந்த அதிமுகவை எதிர்த்தும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் போராடுகின்றனர். இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நேற்று (டிசம்பர் 18) நடைபெற்றது.



சென்னை பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மமக தலைவர் ஜவாஹிருல்லா கொடியசைத்து வைத்து தொடங்கிய முற்றுகைப் பேரணியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.


குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்ப்பது ஏன் என ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் விளக்க உரையாற்றினர். ஜவாஹிருல்லா பேசும்போது, “நாட்டை மத ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தாக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக, சிறுபான்மை இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு பச்சை துரோகம் செய்துள்ளது” என்று கடுமையாக விமர்சித்தார்.

பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்கள் ஒருகட்டத்தில் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவப்படங்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பேரணி பட்டினப்பாக்கத்தைக் கடந்து கிரீன்வேஸ் சாலையை நோக்கி முன்னேறியபோது, அந்த பகுதியில் பேரி கார்டுகள் வைத்து போராட்டக்காரர்கள் முதல்வர் வீட்டுக்கு செல்ல முடியாதபடி போலீசார் தடுத்தனர். எனினும், பேரி கார்டை அகற்றிவிட்டு முதல்வர் வீட்டை முற்றுகையிடுவதற்காக போராட்டக்காரர்கள் முன்னேறினர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி தலைவர்களுக்கு காவல் துறை அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்று போராட்டத்தை முடித்துக்கொள்வதாக தலைவர்கள் அறிவித்தனர். எனினும், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், கிரீன்வேஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments