உள்ளாட்சி தேர்தல் என்றால் என்ன..?உள்ளாட்சி தேர்தல் என்பது முழுக்க முழுக்க தங்களாட்சி - அதாவது மக்களாட்சி ஆகும். நமது மக்கள் அனைவரும் தேர்தல்கள் அனைத்தையும் ஒரே பார்வை கொண்டுதான் பார்க்கின்றனர். 


நாடாளுமன்றத்தின் பணி என்ன, சட்டப் பேரவையின் பணி என்ன, உள்ளாட்சி நிர்வாக அமைப்பின் பணி என்ன, அதிகாரங்கள் என்ன? என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை. அப்படிப்பட்ட விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் விரும்புவதில்லை.

ஆனால், இந்த ஜனநாயகத்தின் நாடித் துடிப்பாகவே உள்ளாட்சி நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் பார்வையில் சொல்வதென்றால், இந்தியாவின் ஆன்மா வதியும் 60 விழுக்காடு கிராமங்களில் வாழும் மக்கள், உள்ளாட்சித் தேர்தலின் மூலம் தங்களுக்கான நிர்வாக அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டு, அடிப்படை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான வேர், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அரசின் கொள்கை வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளின் (Directive Principle of the State Policy) கீழ் 40-ஆவது பிரிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, “கிராம பஞ்சாயத்துக்களை உருவாக்கி, அவைகள் சுய அரசாக செயல்படுவதற்கு ஏற்றாற்போல் உரிய அதிகாரங்களையும், சுதந்திரத்தையும் அரசு வழங்க வேண்டும்”என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் கட்சிகள் இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

கிராம பஞ்சாயத்திற்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவத்தும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த நாட்டில் ஒவ்வொரு பஞ்சாயத்தையும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி, பதவிக் கபளீகரம் செய்துகொண்டு, உள்ளாட்சிகள் மூலம் நிறைவேற்றப்படக் கூடிய திட்டங்களுக்கான நிதியை கையாடி கொழுத்துவிட்டு (மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்), கிராமங்கள் இன்று வரை தன்னிறைவை எட்டாமல் பார்த்துக்கொள்கின்றன. இதற்கு வெள்ளைக்காரன் ஏற்படுத்திய மாவட்ட நிர்வாக அமைப்பு உறுதி துணையாக இருந்து வருகிறது. கிராம மக்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு உடைந்தையாகி நிற்கின்றனர்.

இந்த அவல நிலைக்குக் காரணம், இந்த நாட்டின் மக்களுக்கும், அவர்களுக்காக அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரத்திற்கும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ்ய சட்டத்திற்கும் உள்ள இடைவெளியே காரணமாகும். உள்ளாட்சி நிர்வாக சபையை கட்சிக்கு அப்பாற்பட்டு உருவாக்க வேண்டும் என்பதற்காகவே கட்சி சின்னங்கள் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகிறது. ஆயினும், அதனையும் தங்களின் தேர்தல் சித்து விளையாட்டு வட்டத்திற்குள் கொண்டு வந்து, தங்களை வளப்படுத்திக்கொள்கிற வழிமுறையாக அரசியல் கட்சிகள் மாற்றி அனுபவித்து வருகின்றன.

இப்படி பணத்தைப் பெற்றுக்கொண்டு உள்ளாட்சி அதிகாரத்தை அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து விற்றுவிடுவதால் ஏற்படும் அபாயத்திற்கு எடுத்துக்காட்டுதான், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட வடசேரியில் 2009-ஆம் ஆண்டு நடந்த காவல் துறை - பொதுமக்கள் மோதலாகும். ஆளும் கட்சியைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் அங்கு நிர்மாணிக்க திட்டமிட்ட எரிசாராய ஆலைக்கு அந்த ஊரைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆட்சேபனை ஏதும் இல்லை என்று சான்றிதழ் (No Objection Certificate - NOC) அளித்துவிட்டார். அவர் ஆளும் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றவர். அவர் அளித்த சான்றிதழைக் கொண்டு எரிசாராய ஆலையை நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டது. அப்படி எரிசாராய ஆலை அமைக்கப்பட்டால்,

[28/09 12:43 pm] KRM Kumar: அதற்குத் தேவைப்படும் தண்ணீரை பெரும் ஆழ்துளைக் குழாய்கள் மூலம் எடுத்துப் பயன்படுத்த வேண்டும். எவ்வளவு தண்ணீர்? ஒரு நாளைக்கு சற்றேறக்குறைய ஒன்றே முக்கால் இலட்சம் லிட்டர் தண்ணீர் எரிசாராய ஆலைக்குத் தேவைப்படுகிறது.

ஒரு நாளைக்கு இந்த அளவிற்கு தண்ணீரை எடுத்தால், நிலத்தடி நீரை நம்பியே தாங்கள் செய்யும் உழவுத் தொழில் என்னாவது என்ற கலங்கிய வடசேரி மக்கள் ஒன்று திரண்டு போராட ஆரம்பித்தனர். ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருந்ததால், அரசு இயந்திரம் எரிசாராய ஆலை அதிபருக்கு சாதாகமாகவே நின்றது. மக்கள் கருத்து கேட்க வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், எரிசாராய ஆலைக்குள் அமர்ந்துகொண்டு, கருத்துக் கூற மக்களை அழைத்தது! உள்ளே வந்தால் உதைத்து நொருக்கிவிடுவது என்று ஆலை அதிபர் ஏற்பாடு செய்துவைத்த அடியாட்கள் இருந்தனர். மக்கள் உள்ளே வந்து கருத்துக் கூற மறுத்து மறியலில் ஈடுபட்டனர். காவல் துறை வந்தது. ஆண், பெண், பெரியவர், சிறியவர் என்று பாராமல் அனைவரையும் அடித்து, துவைத்து எடுத்துவிட்டது. இத்தாக்குதல் அனைத்தும் நாளிதழ்களிலும் செய்தியானது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் அந்த கிராம மக்களுக்கு உள்ளாட்சி அமைப்பின் அதிகாரம் அரசியல் கட்சியின் கைகளுக்குச் சென்றுவிட்டால், பிறகு தங்களுடைய வாழ்வாதரத்திற்குக் கூட பாதுகாப்பு இருக்காது என்பதை உணர்ந்தனர். 

இப்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கிராமத்து மக்கள் தங்களுக்குள் முடிவு செய்து, ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட அனைத் தொகுதிகளுக்கும் பொது வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சி நிர்வாகம் தங்கள் கையில் இருக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் முற்றிலுமாக உணர்ந்துள்ளனர். நமது நாட்டின் ஒவ்வொரு கிராமத்தினரும் இந்த உண்மையை உணர வேண்டும். உள்ளாட்சி என்பது மக்கள் ஜனநாயகத்தின் மிக அடிப்படையாக நிர்வாக அமைப்பாகும். இதனை கட்சி அரசியலிற்கு பலியிட்டுவிடக் கூடாது.

இன்றைய நிலையில், நமது நாட்டின் கிராமங்கள்தான் இந்த நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துக் கொண்டிருக்கின்றன. உழவே இந்த நாட்டின் உயிர் நாடியாக எப்போதும் இருந்து வந்துள்ளது. அதற்கு இப்போது பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் மரபணு மாற்றப்பட்ட விதைகளை, மத்திய அரசு ஆதரவுடன் திணித்து, நமது பாரம்பரிய விதைகளை காணடிக்கச் செய்யும் வித்தை அறிவியல் பூர்வமாக அரங்கேற்றப்படுகிறது. 

மறுபக்கம், விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள் என்று (மாவட்ட நிர்வாகத்தால்) அறிவிக்கப்பட்டு, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும், விரைவு சாலைகள் அமைக்கவும் கையகப்படுத்தப்படுகின்றன. இன்னொரு பக்கம் ஆற்று மணல் படுவேகமாக கொள்ளையிடப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்வளம் இல்லாமல் போகும் அபாயம் அதிகரித்து வருகிறது. இப்படி பல்வேறு திசைகளில் இருந்தும் உழவிற்கு அச்சுறுத்தல் வளர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் அரசியல் கட்சிகளின் பிடிகளில் சிக்காமல் இருக்க வேண்டியது அத்யாவசியமாகும்.

கிராமத்திற்கு மட்டுமல்ல, பேரூராட்சி, நகராட்சி ஆகியவற்றின் நிர்வாக அமைப்புகளும் கட்சி அரசியல் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். நகராட்சி வார்டுகள் என்பது மாநகராட்சி வார்டுகள் போலல்லாது ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாகக் கொண்டவையே, இவைகள் அப்பகுதி வாழ் மக்கள், தங்களிடைய உள்ள நேர்மையான, நிர்வாக அனுபவமுடையவரை நிறுத்து கைப்பற்றிட வேண்டும். சிற்றூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி ஆகியவற்றை அக்கறையுள்ள மக்கள் பிரதிநிதிகளை நிறுத்தி கைப்பற்ற வேண்டும். அப்படி கைப்பற்றினால் மட்டுமே உண்மையான மேம்பாடு சாத்தியப்படும்.

நமது நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் என்றைக்கு முழுமையாக, முழு அதிகாரம் பெற்றவையாக மக்கள் கையில் வந்து சேருகிறதோ அன்றைக்குத்தான் உண்மையான மக்கள் ஆட்சி என்பது மலரும். மக்களும் தங்களுக்கு உள்ள நிர்வாக அதிகாரத்தை உணர்வர். இந்த நிலையை எட்டுவதற்குத் தடையாக நிற்பவையே அரசியல் கட்சிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவைகள் ஒருபோதும் மக்களுக்கு அதிகாரத்தை வழங்க மாட்டார்கள். எனவே, மக்களாக முடிவெடுத்து, தங்களுக்குறிய அதிகாரத்தை தங்கள் வாக்கைக் கொண்டே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நிலை ஏற்படாத வரை மலராது மக்களாட்சி.

Source: TNYouthParty - தமிழ்நாடு இளைஞர் கட்சி
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments