குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை! அதிர்ச்சி ரிப்போர்ட்!காக்கா, குருவி, அணில் என்று வேடிக்கை காட்டி தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு சோறூட்டிய காலம் மலையேறிவிட்டது. டிவியைக் காண்பித்து, அல்லது மொபைல் ஃபோனைக் கையில் கொடுத்து வாயில் உணவைத் திணிக்கிறார்கள் பல அம்மாக்கள். குழந்தைகளுக்கு சத்தான உணவை அறிமுகப்படுத்த வேண்டியது நிச்சயம் பெற்றோர்களின் கடமை, அதிலும் முக்கியமாக தாய் குழந்தைகளுக்கு சத்துணவு தந்து வளர்க்க வேண்டும்.

ஆனால் தற்போது குழந்தைகள் பலவிதமான குப்பை உணவுகளுக்கும், ஹோட்டல் உணவுக்கும் பழக்கப்பட்டு சத்தில்லாத உணவுகளை சாப்பிட்டு வருகிறார்கள். பாரம்பரிய உணவுகளையும், நம் மண்ணில் விளையக் கூடிய காய் கனிகளை எல்லாம் மறந்து பல குழந்தைகள் பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறார்கள். இந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.  அண்மையில் எடுக்கப்பட்ட தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின்படி 5 வயதிற்கு உள்ள 32 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் குழந்தைகளில் 40 சதவிகிதம் பெண் குழந்தைகளுக்கும், 18 சதவிகிதம் ஆண் குழந்தைகளுக்கும் அனிமியா தாக்கப்பட்டிருந்தது என்றும் தெரிய வந்தது. இந்த பிரச்னையால் குழந்தைகள் பலவிதமான வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதனை அடுத்து, யுனிசெஃப் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவுப் பட்டியல் ஒன்றினை வெளியிட்டது.   ஸ்டஃப்ட் பராத்தா,  ஜவ்வரிசி கட்லெட் ஆகிய உணவுகளை சத்துள்ள உணவுகளாக பரிந்துரை செய்துள்ளது. இதற்கு அடுத்ததாக பச்சை பயிறு,  அவல், காய்கறி கலவை கொண்ட உப்புமா ஆகியவை இடம் பெற்றுள்ளன.  அசைவ உணவுகளில் முட்டை, இறைச்சி, மீன் உள்ளிட்ட புரதச் சத்து அதிகமுள்ள உணவுகளை லிஸ்ட் செய்துள்ளது. பருப்பு வகைகள் (நட்ஸ்), ஆரஞ்சு உள்ளிட்ட அடர் வண்ணப் பழங்கள், அந்தந்த பருவத்தில் விளையக் கூடிய பச்சைக் காய்கறிகள் என ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளைக் குழந்தைகளுக்குத் தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் உடல் மற்றும் அறிவுரீதியாக வளர்ச்சி அடைவார்கள். அடுத்த தலைமுறை குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது.


இனி குழந்தைகள் ஜங்க் ஃபுட் கேட்டு அடம் பிடித்தாலும் வாங்கித் தராதீர்கள் என்றும் யூனிசெஃப் எச்சரிக்கை செய்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments