கட்டுமாவடி மீன்மார்க்கெட் வெறிச்சோடியது ஏன்?



மணமேல்குடியில் தொடர் மழையால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் வரத்து குறைந்து மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

 புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் சுமார் 15 க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன.

இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது.

 அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகிறது.

 இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர்.

ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன்வரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் உள்ளூர் மீன் வரத்து தடைபட்டது. வெளியூர்களில் இருந்து வரக்கூடிய மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் அதிகமான மக்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்துள்ளனர்.

 இதனால் மீன்களின் விற்பனையும் குறைந்தது. மேலும் இரவு பகலாக மழை பெய்து வருவதால் மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. மழை நின்ற பிறகு மீனவர்கள் கடலுக்குச் சென்றால்தான் மீன் வரத்து அதிகரிக்கும் என மீனவர்கள் கூறுகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments