மீமிசல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது




மீமிசல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள சடையமங்கலம் அரசு டாஸ்மாக் கடை விற்பனையாளர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரவு 10 மணிக்கு மேல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு செல்லும் போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த பணம், செல்போனை பறித்து சென்றனர். மேலும் அதே பகுதியில் அமரடக்கியில் உள்ள கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்றபோது காவலாளி மற்றும் கிராமத்தினர் அவர்களை பிடிக்க முயன்றபோது தப்பி விட்டனர். பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த சாத்தியடி கிராமத்தில் செந்தில் என்பவர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்தனர். மேலும் மீமிசல் அருகே உள்ள கானாடு, மேலகாவனூர் பகுதிகளில் 2 இருசக்கர வாகனங்களையும் மர்மகும்பல் திருடி சென்றனர்.

6 வாலிபர்கள் கைது

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு திருட்டில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் வேதியன்குடியை சேர்ந்த காளிதாஸ் (வயது 22), முத்துராமன் என்கிற ஜீவா (25), அறந்தாங்கியை சேர்ந்த சரவணன் (22), ஆவுடையார்கோவிலை சேர்ந்த தினேஷ் (20), மீமிசலை சேர்ந்த சக்திவேல் (25) மற்றும் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த பூபாலன் (27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments