எட்டாம் வகுப்பிலேயே பத்திரிகை எடிட்டர்..! - அசத்தும் புதுக்கோட்டை மாவட்ட அரசுப் பள்ளி மாணவி



எடிட்டர் பணி முதல் ஒரு இதழ் தயாரிப்புக்கான எல்லா வேலைகளையும் ஒற்றை ஆளாகச் செய்து அசத்திக்கொண்டிருக்கிறார் அரசுப் பள்ளி மாணவி இயல்.
ஒரு பத்திரிகைக்குத் தேவையான மொத்த செய்திகளையும் சேகரிப்பது, அவற்றை டைப் செய்வது, பிழைதிருத்தம் செய்வது, தலைப்பிடுவது, லே அவுட் செய்து பக்கம் வடிவமைப்பது என எடிட்டர் பணி முதல் ஒரு இதழ் தயாரிப்புக்கான எல்லா வேலைகளையும் ஒற்றை ஆளாகச் செய்து அசத்திக்கொண்டிருக்கிறார் அரசுப் பள்ளி மாணவி இயல். அவருக்கு இப்போதுதான் வயது 13.

இவர், புதுக்கோட்டை - மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். அவர்தான் `நல்ல பத்திரிகை' என்ற தலைப்பிலான இதழை கம்ப்யூட்டரில் தானே வடிவமைத்து அச்சிட்டு வெளியிட்டும் வருகிறார். அதில் கல்வி மற்றும் அரசுப் பள்ளிகள் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறார். பத்திரிகை துறையின்மீது அதிக நாட்டம் கொண்டுள்ள இயல், தன்னுடைய தந்தையிடமிருந்து போட்டோஷாப் மற்றும் லே அவுட் ஆகியவற்றை கற்றிருக்கிறார். மேலும், பிழை இல்லாமல் ஆங்கிலம் மற்றும் தமிழிலும் விரைவாக டைப் செய்யவும் ஏழாம் வகுப்பு படிக்கும்போதே கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். இயலின் இந்த இதழியல் பணிகளுக்கு அவருடைய பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த ஊக்கமளித்து வருகின்றனர்.


இயலின் இதழ் வடிவமைப்பு பணியைக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி அவரை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தியுள்ளார். தற்போது தன்னுடைய இரண்டாவது இதழை எட்டுப் பக்கங்களில் டேப்ளாய்டு வடிவத்தில் வெளியிட்டுள்ளார். இயலின் இதழியல் பணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

தன்னுடைய படிப்புக்கு இடையிலும் இதழுக்கான செய்திகளை பல்வேறு பள்ளிகளில் இருந்தும் இவர் மின்னஞ்சல் மூலமாக பெற்றுவருகிறார். மேலும், முக்கியமான செய்திகளை இணையதளங்களிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்கிறார். ஒரு சம்பவத்தை, எப்படி சுவாரஸ்யமான செய்தி ஆக்குவது, செய்திக்கேற்ற புகைப்படம் எடுப்பது, வாசகர்களைக் கவரும் வகையில் பக்க வடிவமைப்பு செய்வது, சிறந்த முறையில் தலைப்பிடுவது போன்றவற்றைக் கற்றுக்கொள்வதில் தீவிர கவனம் செலுத்திவருகிறார்.

இதழியல் துறையில் ஏற்பட்டுவரும் ஒவ்வொரு புதுமையையும் உன்னிப்பாக கவனித்துவருகிறாராம். அதற்கேற்ப தன்னுடைய இதழிலும் மாற்றங்கள் கொண்டுவர கடுமையாக உழைத்து வருகிறார். பள்ளி விடுமுறை நாள்களில் தனது வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் இந்த இதழியல் வடிவமைப்பு பணிகளை ஆர்வமுடன் செய்துவருகிறார்.
சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும், விழிப்புணர்ச்சியையும் ஊடகங்கள் மூலம் மட்டுமே கொண்டுவர முடியும் என திடமாக நம்பும் இயல், பெயருக்கு ஏற்ற மாதிரி தன்னுடைய இதழை நல்ல பத்திரிகையாக நடத்தப்போவதாக உற்சாகமுடன் கூறுகிறார்.

நன்றி :- விகடன்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments