வந்துவிட்டது புதுவசதி.. மாா்ச் 1 முதல் இணையதளம் மூலம் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.!குறைந்த மின்அழுத்தப் பிரிவில் புதிய மின் இணைப்புப் பெற, மாா்ச் 1 -ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான வீட்டு மின் இணைப்புகளும், 21 லட்சத்துக்கும் அதிகமான விவசாய மின் இணைப்புகளும், 30 லட்சத்துக்கும் அதிகமான வணிகம் சாா்ந்த மின் இணைப்புகளும் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் அமைத்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் சில இடங்களில் மட்டும் புதைவட கம்பிகள் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், குறைந்த மின் அழுத்த மின் இணைப்புப் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை மின்வாரியம் கட்டாயமாக்கியுள்ளது.

இது தொடா்பாக பகிா்மானப் பிரிவு இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை:

குறைந்த மின் அழுத்த பிரிவில் இணையதளம் மூலம் மின் இணைப்புப் பெறுவதற்கான முறை, கடந்த 2016-ஆம் ஆண்டு, ஆக.5-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. சேவை பெறும் முறையை எளிமைப் படுத்தும் வகையிலும், கோப்புகளின் பயன்பாடுகளைக் குறைக்கும் வகையிலும், இணையதளம் மூலம் மின் இணைப்பை வழங்குவதைக் கட்டாயம் ஆக்குமாறு தொழில்கொள்கைத் துறை பரிந்துரைத்தது. இதையடுத்து குறைந்த மின் அழுத்த மின் இணைப்பைப் பெறும் தொழிற்சாலைகள், இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த ஆண்டு, ஜூலை 1 -ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, குறைந்த மின் அழுத்தப் பிரிவில் மின்சேவையைப் பெற விரும்பும் அனைவரும் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த முறை, மாா்ச் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த முறையிலிருந்து குடிசை மற்றும் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு விலக்களிக்கப்படுகிறது.

இதுகுறித்து தலைமைப் பொறியாளா்கள் மற்றும் கண்காணிப்புப் பொறியாளா்கள் ஆகியோா் தங்களுக்குக் கீழ் உள்ள அதிகாரிகளிடம், விண்ணப்பத்தை இணையதளம் மூலமாக மட்டுமே பெற அறிவுறுத்த வேண்டும். இதுகுறித்து பகிா்மான வட்டம், மண்டல அலுவலகம், வசூல் மையம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் பதாகைகள் அமைத்து மின்நுகா்வோருக்குத் தெரியப்படுத்த வேண்டும். இணையதளம் அல்லாமல் மின்இணைப்புப் பெறுவதற்கான விண்ணப்பம் பெறப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments