குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து புதுவை சட்டப் பேரவையில் தீர்மானம்




குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி புதுச்சேரி சட்டமன்றத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், இச்சட்டத்தினை நிறைவேற்றமாட்டோம் என்று தெரிவித்தும் கேரளம், மேற்கு வங்காளம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரைவில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண் பேடி கடிதம் அனுப்பினார். அது பற்றி பேரவையில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "முதலமைச்சருக்கு ஆளுநர் ரகசியமாக அனுப்பும் கடிதத்தினை முன்னதாக வாட்சாப் மற்றும் சமூக வலைதளத்தில் கிரண் பேடி வெளியிடுவது விதிமீறிய செயல். இதனால் ஆளுநர் பதவிக்கு கிரண் பேடி இழுக்கு ஏற்படுத்துகின்றார்," என பேரவையில் முதல்வர் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், "அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஒன்றரை லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம். மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டத்தை, நாங்கள் ஏற்க மாட்டோம். புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்வது என்றால் செய்து கொள்ளுங்கள். மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானவை," என்று முதல்வர் நாராயணசாமி.

தீர்மானத்தை சபாநாயகர் சிவக்கொழுந்து வாசித்தார். பிறகு தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்படுவதாக கூறினார். என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த சிறப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்துள்ளனர். ஆகவே எதிர்க் கட்சிகளின்றி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றிய பிறகு பத்திரிகையார் சந்திப்பில் பேசிய முதல்வர் நாராயணசாமி, "துரதிஷ்ட வசமாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த சட்டத்தை நிறைவேற்ற கூடாது என கடிதம் அனுப்பியுள்ளார். புதுச்சேரி சட்டமன்றம் தொடர்பான விஷயத்தில் தலையிடும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு கிடையாது. மேலும் இச்சட்டத்தில் தங்களது நிலை என்ன என்பது குறித்து எதிர்க் கட்சியான என்.ஆர் காங்கிரஸ் தெரிவிக்கவேண்டும்," என்று குறிப்பிட்டார்.

சட்டமன்றத்தில் காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளான் மண்டலமாக அறிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments