கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி?உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து ஜெர்மனியை சேர்ந்த சீமென்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது.

70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள இந்த வைரசால் இதுவரை 3,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதே போல வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உயிர்கொல்லி நோயாக மாறி உள்ள இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். வழக்கமான சளித்தொல்லை போல் இருமல், தொண்டை இருமல், தலைவலி, மூக்கு ஒழுகுதல், சுவாசக் கோளாறு, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் இருக்கும்.

இவை வழக்கமாக இருப்பது தானே என அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. இந்த அறிகுறிகள் இருந்தால் டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இந்த வைரஸ் பரவுகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து ஜெர்மனியை சேர்ந்த சீமென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரசால் ஏற்படும் காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளி தும்மும் போதும், இருமும் போதும் காற்றில் வைரஸ் கிருமிகள் பரவுகின்றன. அப்போது அருகில் இருக்கும் நபர்களுக்கும் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

ஒருவர் தும்மினால் இருமினால் அவரிடம் இருந்து 2.5 மீட்டர் தொலைவு தள்ளி சென்று விட வேண்டும். அந்த நபர் முகமூடி அணிந்திருந்தால் அருகில் உள்ளவர்களுக்கு வைரஸ் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும்.

இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலில் காய்ச்சலுக்கான எவ்வித அறிகுறிகளும் இருக்காது. இயல்பாகவே செயல்படுவார்கள். ஆனால் அப்போது முதலே அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு வைரஸ் கிருமிகள் பரவுகிறது. எனவே மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் சளி திரவத்தில் இருக்கும் வைரஸ் கிருமிகள் மற்றும் நோயாளி தும்மும் போது, இருமும் போது காற்றில் பரவும் வைரஸ் கிருமிகள் கதவு கைப்பிடிகள், பேனா, கம்ப்யூட்டர் மவுஸ், டிஜிட்டல் கருவிகள், டம்ளர்கள், மின் தூக்கி பொத்தான்கள், மாடி கைப்பிடி உள்ளிட்ட பொருட்களில் படிகின்றன.

இந்த பொருட்களில் படியும் வைரஸ் கிருமிகள் 48 மணி நேரம் வரை உயிரோடு இருக்கின்றன. இவற்றை யார் தொடுகிறார்களோ அவர்களுக்கு வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது.

எனவே சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். குறிப்பாக விரல் இடுக்குகளை தேய்த்து கழுவ வேண்டும். சந்தேகத்திற்குரிய பொருட்களை தொட்டால் 20 வினாடிகள் கைகளை கழுவுவது அவசியம்.

 முக கவசம்

நோயாளி தும்மும் போது, இருமும் போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். அந்த கைக்குட்டையை உடனடியாக குப்பைத் தொட்டியில் போட்டு விட வேண்டும். ஒரு முகமூடியை ஒரு நாளைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. பல நாட்கள் ஒரே முகமூடியை பயன்படுத்தினால் அதன் மூலமாகவே வைரஸ் தொற்று ஏற்படும்.

இதே வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளி பயன்படுத்திய பொருட்களை தொடக்கூடாது. குடும்பத்தில் தாய், தந்தை, குழந்தைகளுக்கு தனித்தனி கைத்துண்டுகளை பயன்படுத்த வேண்டும்.

கண், காது, மூக்கை கைகளால் தொடக்கூடாது. இருமல், சுவாசக் கோளாறுடன் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments