ஊராட்சிமன்றத் தலைவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்.!



ஊராட்சிமன்றத் தலைவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாக அலுவலர்களான ஊராட்சி மன்றத் தலைவர்கள் போர்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். தடுப்பு நடவடிக்கையாக ஊராட்சியில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வினை ஊராட்சி பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். 

பேருந்து நிறுத்தம் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்கள், ஊராட்சி அலுவலகம், ஊராட்சி எல்லைகளில் சோப்பு மூலம் கைகளை சுத்தம் செய்யவும், கை சுத்திகரிப்பான் பயன்படுத்திவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஊராட்சியில் தூய்மை காவலர்கள், சுகாதார ஊக்குவிப்பாளர்கள், சுய உதவிக் குழு பிரதிநிதிகள் ஆகியோரை பொறுப்பாக்கி பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஊராட்சிப் பகுதிகளில் குப்பை, கூளங்கள் சேராமல் தூய்மை படுத்தும் பணியினை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தினத்தோறும் பொது இடங்களில் கிருமி நாசினி மூலம் தூய்மை படுத்திட வேண்டும். தேவையான சோப்பு, முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை ஊராட்சியில் போதிய அளவில் இருப்பில் வைத்து பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். 

அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, பால், மருந்து பொருட்கள் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். 5 நபர்களுக்கு மேல் தேவையற்ற கூட்டங்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் கூடி நடத்தும் பொது நிகழ்ச்சிகள், திருவிழாங்கள், பொழுது போக்குகள், விளையாட்டுகள் ஏதும் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் மத சடங்குகள் செய்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும். அனாவசியமாக தேவையற்ற மக்கள் அதிகம் கூடும் கடைகள் செயல்படாமல் தடுக்க வேண்டும். 

வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வருகைதந்துள்ளவர்கள் வீடுகளில் தனிமை கண்காணிப்பில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும். ஊராட்சியில் மக்கள் தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்திட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீண் வதந்தி, பீதி பரப்புபவர்களை காவல் துறை, கட்டுப்பாட்டு அறை தகவலுக்கு தெரிவிக்க வேண்டும். கொரானா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கும், மருந்துவ துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். 

உணவகங்களில் அமர்ந்து உணவு வழங்காமல், பார்சல் மூலம் மட்டுமே உணவு வழங்கப்பட வேண்டும். சுகாதாரத் துறை, வருவாய் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி தொடர்பான தீர்வு செய்யப்பட வேண்டிய நிகழ்வுகள் ஏதும் ஏற்பாட்டால் உடனடியாக தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். 

இந்த தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்திடும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரால் கௌரவிக்கப்பட்டு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments