நோய்களில் இருந்து பாதுகாக்க இஸ்லாம் கூறும் வழிகள்...காற்று, நீர் மாசுபடுவதால் காலரா, அம்மை போன்ற கொள்ளை நோய்கள் பரவுகின்றன என்பது நாம் அறிந்த செய்தி. நோய் மூலம் ஏற்படும் ஆபத்தைவிட, நோய் தாக்கிவிடுமோ என்ற பீதியில் ஏற்படும் ஆபத்துதான் பேராபத்தாகும்.


வரலாறு நெடுகிலும் தொற்று நோய்கள் புதுப்புது பெயர்களில் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கிறது.

ஹிஜ்ரி 18-ம் ஆண்டு சிரிய நாட்டில் ஏற்பட்ட ‘அமவாஸ்’ என்ற கொள்ளை நோயில் 30 ஆயிரம் பேர் இறந்தனர். அமவாஸ் என்பது பைத்துல் முகத்தஸுக்கும் ரம்லாவுகும் இடையே உள்ள ஒரு கிராமத்தின் பெயராகும்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் காசநோய் பெரும் கொள்ளை நோயாக இருந்தது. 2002-ம் ஆண்டு ‘சார்ஸ்’ நோய் உலகெங்கும் பரவி பெரும் பீதியைக் கிளப்பியது. 2012-ம் ஆண்டு மத்தியக் கிழக்கு நாடுகளில் ‘மெர்ஸ்’ எனும் கொள்ளை நோயால் பலர் பாதிக்கப்பட்டனர்.

ஆக ஏதோ ஒரு பெயரில் கொள்ளை நோய்கள் அவ்வப்போது வந்துகொண்டேதான் இருக்கின்றது. நாம்தான் அதற்குப் புதுப்புது பெயர்களைச் சூட்டி கிலி ஏற்படுத்துகின்றோம். கொள்ளை நோய் பரவினால் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நட வடிக்கை குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது?

உமர் (ரலி) அவர்கள் மக்களின் நிலையை ஆராய்வதற்காக சிரியா நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்ஃக் எனும் இடத்தை அடைந்தபோது மாகாணப் படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர் களின் நண்பர்களும் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து சிரிய நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “ஆரம்பகால முஹாஜிர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்” என்று சொல்ல, அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். “சிரியா நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ள காரணத்தால் அங்கு போகலாமா? அல்லது மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா?” என்று ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அவர்களில் சிலர், “நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டுவிட்டோம். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் உசிதமாகக் கருதவில்லை” என்று சொன்னார்கள். வேறு சிலர், “உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லை” என்று சொன்னார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டுப் பிறகு, “மதீனாவாசி களான அன்சாரிகளை அழைத்து வாருங்கள்” என்று சொல்ல, அவ்வாறு அழைத்து வரப்பட்டது. அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்கள் வழி யிலேயே சென்று அவர்களைப் போன்ற கருத்து வேறுபாடு கொண்டார்கள்.

அப்போதும் உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டுப் பிறகு, “மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்துவந்த குறைஷிப் பெரியவர்களில் யார் இங்கு உள்ளனரோ அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல, அவ்வாறே அழைத்து வரப்பட்டது.

அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் அனைவரும், “மக்களுடன் நீங்கள் திரும்பிவிட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளை நோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்” என்றனர்.

ஆகவே உமர் (ரலி) அவர்கள் மக்களிடையே, “நான் காலையில் என் வாகனத்தில் மதீனா புறப்படவிருக்கின்றேன். நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்” என்று அறிவிப்புச் செய்தார்கள்.

அப்போது அபூஉபைதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா ஊர் திரும்புகின்றீர்?” என்று கேட்க, உமர் (ரலி) அவர்கள், “அபூஉபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டேன். ஆம், நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப் படிதான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டார்கள்.

அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகப் போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக அவ்வூரைவிட்டு வெளியேறாதீர்கள்” என்று சொல்ல நான் கேட்டேன் என்று சொன்னார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள், (தமது முடிவு நபி (ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

கொள்ளை நோய் பரவுவதைத் தடுப்பதற்காக இஸ்லாம் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதுதான். அதே சமயம் இஸ்லாம் மனிதர்களிடையே உருவாக்க விரும்பும் தூய்மை, சுத்தம், ஒழுக்க விழுமங்கள், நல்ல உணவு முறைகள், ஆரோக்கியகரமான முன்னேற்பாடுகள், மன நிம்மதி தரும் வணக்க வழிபாடுகள் ஆகிய அனைத்தும் மனிதர்களுடைய ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பலவிதமான நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு ‘உளு’ எனும் அங்கசுத்தி, பல்வேறு ரூபங்களில் உதவிகரமாக அமைகிறது என்பதையே இங்கே சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம். கொள்ளை நோய் பரவாமல் தடுக்க இன்றைய மருத்துவ உலகம் அனைத்துக்கும் முதலாவதாக தூய்மையையே பரிந்துரை செய்கிறது. அதுவும் தண்ணீரால் உறுப்புகளைச் சுத்தம் செய்வதை வலியுறுத்துகிறது. தண்ணீரால் உறுப்புகளைச் சுத்தம் செய்வதையே இஸ்லாம் ‘உளு’ என்ற பெயரில் அழைக்கிறது.

அங்க சுத்தி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சில ஒழுக்க விதிமுறைகளை இஸ்லாம் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளது. அவை இன்றைய சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்.

1) ஒவ்வொரு முறை ‘உளு’ செய்யும்போதும் பல் துலக்க வேண்டும்.

2) தொடக்கத்தில் மணிக்கட்டுவரை உள்ள பகுதிகளை மூன்று முறை கழுவ வேண்டும்.

3) மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

4) மூன்று முறை மூக்கிற்கு தண்ணீர் செலுத்துதல், வெளியேற்றுதல் வேண்டும்.

5) தாடியைக் கோதிக் கழுவ வேண்டும்.

6) விரல்களையும் கோதிக் கழுவ வேண்டும்.

7) ஒவ்வோர் உறுப்பையும் மூன்று முறை கழுவுதல் வேண்டும்.

8) உறுப்புகளை அழுத்தித் தேய்த்துக் கழுவுதல் வேண்டும்.

9) முகம், கை கால்களை நீட்டிக் கழுவ வேண்டும்.

10) தண்ணீரைக் குறைவாகச் செலவு செய்ய வேண்டும்.

கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படவேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இந்தச் செய்முறையையே வலியுறுத்துகின்றன. ஒரு முஸ்லிம் எப்போதும் அங்கசுத்தி உடையவனாக இருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதையும் மறக்க வேண்டாம்.

ஓர் இடத்தில் தொற்று நோய் பரவிவிட்டால் அது வேறோரு இடத்திற்குப் பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தானே அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுதானே புத்திசாலித்தனம்.

தொற்றுநோய் இருப்பவர் மற்றவர்களுடன் தங்குதல் கூடாது. அவ்வாறு தங்குவதைத் தடை செய்யவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “நோயுற்ற மனிதரை ஆரோக்கியமானவருக்குப் பக்கத்தில் கொண்டு வரவேண்டாம்”. (புகாரி, முஸ்லிம்)

“நோயுற்ற கால்நடைகள் நோயற்ற கால்நடை களுக்கு அருகே சென்று தண்ணீர் குடிக்க வைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்” (புகாரி) என்ற நபிமொழியையும் இத்துடன் இணைத்துப் படிக்க வேண்டும்.

மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments