சிஏஏ போராட்டம்- கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!



சிஏஏ போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த கைது நடவடிக்கை உத்தரவை நிறுத்தி வைக்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் நடத்தும் போராட்டத்தை தடுக்கக் கோரி வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அந்த மனுவில், இந்தப் போராட்டம் காரணமாக பள்ளிக்குழந்தைகள், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு நேற்று (05/03/2020) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர்,  போராட்டங்கள் தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின், அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க காவல்துறையினருக்கு எந்தத்  தடையும் இல்லை. சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும், அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுமே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. 

குறிப்பிட்ட பகுதியில் போராட்டம் நடத்த எவருக்கும் உரிமையில்லை. போராட்டம் நடைபெறும் சாலையில் பள்ளி, மருத்துவமனைகள் அமைந்துள்ளதாகவும், இந்தப் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் உள்ளதால், திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். மனு விசாரணைக்கு வந்தபோது திருப்பூர் போராட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த கோபிநாத் மீது ஏற்கனவே குற்ற வழக்கு உள்ளது என்றும், அமைதியான வழியில் போராடி வரும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவுக்கூடாது என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் மார்ச் 11- ஆம் தேதி கேட்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க ஆணையிட்டனர். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments