புதுக்கோட்டையில் மருத்துவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் கொரோனா பரிசோதனை! - புது முயற்சியில் அரசு மருத்துவமனை.!பரிசோதனை அறைக் கதவு முழுமையாக அடைக்கப்பட்டு இரண்டு கைகள் மட்டும் உள்ளே செல்லும் வகையிலான இரண்டு துவாரங்கள் கொண்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கைகளுக்கு மட்டும் பாதுகாப்பு கவசங்களைக் கொண்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்து மாதிரிகளை எடுத்து அனுப்புகின்றனர்.


உலக நாடுகளையே பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நோயாளிகளைக் குணப்படுத்தப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் என யாரையும் கொரோனா விட்டுவைப்பதில்லை. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கை அதிகம்.

நோயாளிகளைக் கையாள்வதற்கு முன்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதுகாப்பு உடைகளை மட்டும் அணிவதற்கு 15 நிமிடங்களுக்கு மேல் தேவைப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது, கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்று சந்தேகிப்பவர்களிடம், கொரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மாதிரிகளை எடுப்பதற்காக அருகே செல்லும் மருத்துவர்கள் பாதுகாப்பு உடை, முகக் கவசம், கண்ணாடி உள்ளிட்டவற்றை முழுமையாக அணிந்துகொண்டுதான் பரிசோதனை செய்கின்றனர்.


இந்த நிலையில், முழுமையான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல், பரிசோதனை செய்யும் வகையில் புது முயற்சியைப் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், உள்ள தனிமைப்படுத்த வார்டில் உள்ள பரிசோதனை அறைக் கதவு முழுமையாக அடைக்கப்பட்டு இரண்டு கைகள் மட்டும் உள்ளே செல்லும் வகையிலான இரண்டு துவாரங்கள் கொண்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே தடுப்பு இருக்கிறது. கைகளுக்கு மட்டும் பாதுகாப்புக் கவசங்களைக் கொண்டு மருத்துவர் கைகளை அந்த துவாரங்களின் வழியே விட்டு பரிசோதனை செய்து மாதிரிகளை எடுத்து அனுப்புகின்றனர். இதனால், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர் இருமும்போதும் தும்மும்போதும் வரும் நீர்த்திவலைகள் மருத்துவரின் மேல் தொற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இதுபற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, ``பரிசோதனை அறையில் ஒருவருக்குப் பரிசோதனை முடிந்த பிறகு உடனடியாக அந்த இடம் லைசால் திரவம் கொண்டு தொற்று நீக்கம் செய்யப்படும். அரைமணி நேரம் கழித்துத்தான் அடுத்த நோயாளி அங்கு அனுமதிக்கப்படுவார். மருத்துவரும் அறை உள்ளே பாதுகாப்பாக இருப்பார். சாதாரணமாகப் பரிசோதனை செய்யும்போது, ரூ.3,000 வரையிலான உடைகளை உடுத்திக்கொண்டாலும், மிகவும் பாதுகாப்புடன்தான் பரிசோதனை செய்ய வேண்டி இருந்தது. அந்தப் பாதுகாப்பு உடைகளை நீண்ட நேரம் முழுமையாக உடுத்திக்கொண்டு பணி செய்வது மிகவும் சிரமம். இந்த முறையால், சிரமம், செலவு, காலதாமதம் ஆகியவைத் தவிர்க்கப்படும்.

தொற்று நீக்கக் கவசங்கள் தேவை இல்லை என்றாலும், பாதுகாப்புக் கருதி கவச உடை அணிந்துதான் தற்போது பரிசோதனை செய்கிறோம். கூடிய விரைவில், ரப்பர் கிளவ் போன்ற நீளமான கருவியை இந்த ஓட்டையில் பொருத்துவதன் மூலம் 100 சதவிகித பாதுகாப்பை உறுதி செய்ய இருக்கிறோம். இதேபோல், செயற்கை சுவாசம் தேவைப்படும் நபர்களுக்கு அவர்களுடைய தலையின் பக்கத்தில் ஒரு கண்ணாடித் தடுப்பை ஏற்படுத்தி அதில் இரண்டு துளையிட்டு மருத்துவர்கள் அதற்குப் பின் இருந்து வைத்தியம் செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறோம். தற்போது, வரையிலும் இங்கு கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சை பெற்றுவரவில்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியம்" என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments