வளைகுடா நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை.!கொரோனா வைரசின் பாதிப்பு காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படை மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு வளைகுடா நாடுகளும் விதிவிலக்கல்ல. வளைகுடா நாடுகளிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டதால் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளிலும் , வீடுகளிலும் முடங்கியுள்ளனர். வளைகுடா பகுதிகளில் நோயின் தீவிரம் அதிகமாகி வருவதால் அங்குள்ள இந்தியர்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாடு (இந்தியாவுக்கு) திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

உலகின் பல நாடுகளில் இருந்தும் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் உள்ளிட்ட தென்மேற்கு ஆசியாவில் பாரசீக வளைகுடாவின் எல்லையில் உள்ள நாடுகள் வளைகுடா நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஏராளமான இந்திய தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கிறார்கள். 

இங்கு இந்தியத் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் எண்ணெய் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகள் செய்யப்படுகின்றன. ஆயினும் வளைகுடா நாடுகளில் பல இந்தியர்கள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்பதற்காக கடற்படை மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. நோயின் தாக்கம் அதிகரிப்பதையொட்டி அ்நத முயற்சி சற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிரதமர் மோடி, குவைத் பிரதமர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-சபாவை, தொலைபேசியில் அழைத்துப் பேசினார். இருநாட்டு தலைவர்களும் கொரோனா பாதிப்பு குறித்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலவரங்கள் குறித்தும் விவாதித்தனர்.

அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் கூறுகையில், "வளைகுடா நாடுகளிலிருந்து இந்திய மக்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அங்கு இருக்கும் நிலைமையைக் கண்காணித்து அதற்கேற்ப தயாராகி வருகிறோம். நாங்கள் ஏர் இந்தியா மற்றும் இந்திய கடற்படையிடம் விரிவான திட்டத்தை உருவாக்க கேட்டுக் கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளனர். இது தொடர்பாக துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி கூறுகையில், இங்கிருந்து இந்தியர்களை அழைத்து செல்வது தொடர்பாக டில்லியில் இருந்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதற்காக காத்திருக்கிறோம். இந்திய அரசு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும். ஏர் இந்தியா விமானம் இந்த சேவையில் ஈடுபடும். இவ்வாறு தெரிவித்தார்.

வளைகுடா நாடுகளில் சுமார் 10 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் துறைமுக நகரங்களில் இருப்பதால் கடற்படை மூலம் அவர்களை மீட்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்திய கடற்படை வளைகுடா நாடுகளில் இருந்து 1,500 இந்தியர்களை மூன்று கடற்படை போர்க்கப்பல்களில் இருந்து வெளியேற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. தேவையான நடவடிக்கைகளைத் தொடங்க வெளிவிவகார அமைச்சகம் (எம்.இ.ஏ) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது. இதுபோலவே துறைமுகங்கள் இல்லாத மற்ற பகுதிகளில் ஏர் இந்தியா விமானங்களை அனுப்பி மீட்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அவ்வாறு மீட்கப்படும் போது முதலில் வசதி குறைந்த தொழிலாளர்களை முன்னுரிமை அடிப்படையில் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments