கந்தர்வகோட்டை அருகே தைல மரக்காட்டில் மயங்கி கிடந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.! கொலையாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்.!கந்தர்வகோட்டை அருகே தைல மரக்காட்டில் மயங்கி கிடந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தாள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி நேற்று முன்தினம் தண்ணீர் எடுக்க சென்ற போது அதே பகுதியில் உள்ள தைல மரக்காட்டில் மயங்கிய நிலையில் கிடந்தாள். அவரை மர்மநபர்கள் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை அவரது பெற்றோர் மற்றும் கந்தர்வகோட்டை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அதிகாலை அவள் இறந்தாள். அவளது உடல் பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் சிறுமியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி அங்கு அவளது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலச்சந்திரன், போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து சிறுமியின் உடலை பெற்ற அவர்கள் சொந்த ஊருக்கு கொண்டு வந்து நேற்று பகலில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் கந்தர்வகோட்டையில் முகாமிட்டு இருந்தார். சிறுமியின் உடலை அடக்கம் செய்த பின் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் அவர் ஆலோசனை நடத்தினார்.

சிறுமியை மர்மநபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தின் கீழ் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், ‘சிறுமியை மர்மநபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அதே நேரத்தில் அவளது கழுத்தை நெரித்துள்ளனர். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவள் மயக்கமடைந்துள்ளாள். இந்த நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தாள். இந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றப்படும். மர்மநபர்கள் பற்றி எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை” என்றனர்.

கொலையாளிகளை பிடிக்க 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் என 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் சிறுமியை கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments