முக்கண்ணாமலைப்பட்டியில் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நிறைவு: மாணவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் பொதுக்கூட்ட தீர்மானங்கள்!



புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கிளை சார்பாக நடைபெற்ற கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பின் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று (07.06.2026) என்.எம்.ஆர் (NMR) வளாகத்தில் நடைபெற்றது.
​இதற்கு மாவட்டத் துணைத் தலைவர் ரபீக் ராஜா தலைமை வகித்தார். கிளைத் தலைவர் முகம்மது யூசுப், செயலாளர் மைதீன் பாட்சா, பொருளாளர் ஜக்கரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் காரைக்கால் யூசுப் மற்றும் மாவட்டப் பேச்சாளர் முகம்மது யூசுப் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாணவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி
இங்குள்ள தவ்ஹீத் மர்கஸில் கடந்த ஏப்ரல் 25 முதல் மே 10 வரை 15 நாள்கள் சிறுவர், சிறுமிகளுக்கான கோடைக்கால நல்லொழுக்கப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் குழந்தைகளுக்குப் பெற்றோர்களைப் பேணுதல், பெரியோர்களை மதித்தல், நோயாளிகளை நலம் விசாரித்தல் மற்றும் திருக்குர்ஆன் ஓதுதல் உள்ளிட்ட பல்வேறு நற்பண்புகள் கற்பிக்கப்பட்டன. இந்த வகுப்புகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு விழாவில் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.

​முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுமக்களின் நலன் மற்றும் சமூக மேம்பாடு குறித்த பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்,
பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் பேரணி 
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜூன் 12-ல் அறந்தாங்கியிலும், 13-ல் புதுக்கோட்டை நகரிலும், 15-ல் மணமேல்குடியிலும் நடைபெறும் பேரணிகளில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.
மத நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும் 
பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாள் வழங்கப்பட்ட குர்பானி தொடர்பான தீர்ப்பு இஸ்லாமியர்களிடையே தேவையற்ற குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை அரசு சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும்.

​முஸ்லிம்களுக்கு 7% இடஒதுக்கீடு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
​பூரண மதுவிலக்கு: மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளைப் படிப்படியாக மூடி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
வாக்குச்சீட்டு முறை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மீதான சந்தேகங்களுக்குத் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காததால், பழைய வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

​விலைவாசி உயர்வுக்குக் கண்டனம்
பெட்ரோல், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் வேலையின்மையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

​சாலை வசதி 
முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் பள்ளி மற்றும் பள்ளிவாசலுக்குச் செல்லும் நடுத்தெரு சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால், அங்குப் புதிய சாலை அமைக்க வேண்டும்.

​புதிய பேருந்து வசதி
இலுப்பூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பழுதடைந்த 'தடம் எண் 25' பேருந்துக்குப் பதிலாகப் புதிய பேருந்தை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எனத் திரளானோர் கலந்து கொண்டனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments