ரம்ஜான் அன்று பொது முடக்க நிபந்தனைகள் தளர்வு: கேரள முதல்வர் பினராய் விஜயன் பேட்டி.!



கேரளாவில் ரம்ஜான் தினத்தன்று பொது முடக்க நிபந்தனைகள் தளர்வு செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


கேரளத்தில் கரோனா தொற்று பரவல் குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்,

“தற்போது கேரளாவில் கரோனா பரவும் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக 28 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இதுவரை கேரளாவுக்கு 91,344 பேர் வந்துள்ளனர்.

இதில் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் மட்டும் 82, 299 பேர். இதுவரை 43 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து 9,367 பேர் வந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 157 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். தற்போது கேரளாவில் நோய் அதிகரித்து வருவது நமக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு முன்னெச்சரிக்கை ஆகும். எனவே, கூடுதல் சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கேரளாவுக்கு வரவேண்டாம் என்று கூற முடியாது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன் இங்கு இருப்பவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கேரளாவின் தற்போது பொது முடக்கத்தில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

இதனால் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். இது தவறாகும். வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்காகத்தான் பொது முடக்க நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதே தவிர கொண்டாடுவதற்காக அல்ல. மேலும், பொது இடங்களில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளையும் அழைத்துச் செல்கின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கேரளாவில் எஞ்சியுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி மே 26-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கேரள பொதுக் கல்வித் துறை செய்துள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கும், தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் வீடுகளிலுள்ளமாணவர்களுக்கும் தேர்வு எழுத சிறப்பு வசதி ஏற்படுத்தப்படும். 

தேர்வு மையங்களில் அனைத்து மாணவர்களும் உரிய பரிசோதனை நடத்திய பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக 5,000 தெர்மல் ஸ்கேனர்கள் வாங்கப்பட்டுள்ளன. தேர்வு முடிந்தபின் விடைத்தாள்கள் 7 நாட்கள் தேர்வு மையங்களில் வைக்கப்பட்டிருக்கும். வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் மாணவர்கள் அங்கேயே தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களுக்குத் தேர்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் அடங்கிய நோட்டீஸ்கள் மற்றும் முகக்கவசங்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களை மாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். 

ஜூன் 1-ம் தேதி முதல் கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை ரம்ஜான் பண்டிகை வந்தால் அன்று மட்டும் பொது முடக்கத்தில் நிபந்தனைகள் தளர்த்தப்படும்” என்று தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments