டெல்லியில் பிரசவத்திற்கு 13 மணிநேரம் அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி!! ஆம்புலன்சிலேயே உயிரிழந்த பரிதாபம்.!கொரோனா கொடும் பாதிப்பின் சோக கதைகள் முற்றுப்புள்ளி இன்றி நீண்டு கொண்டே செல்கின்றன. டெல்லியில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்கு மருத்துவமனை கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே மாண்டு போன மனம் வெதும்ப வைக்கும் நிகழ்வு தற்போது நடந்துள்ளது.


டெல்லி அருகே நொய்டா பகுதியில் வசித்த 8 மாத கர்ப்பிணி நீலம். 30 வயதான இவருக்கு ஏற்கனவே சில உடல்நிலை பிரச்சனைகள் இருந்த நிலையில், திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கர்ப்பிணி மனைவியை கணவர் விஜேந்தர் சிங் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். குழந்தை பிறக்கப்போகிறதே என்ற குதூகலத்துடனும், எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற பதற்றத்துடனும் ஆம்புலன்சில் ஏறிய இத்தம்பதிக்கு சென்ற இடமெல்லாம் அதிர்ச்சி தான் காத்திருந்தது. 

கொரோனா நோயாளிகள் இருப்பதால் இடம் இல்லை என கூறி மருத்துவமனைகள் கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்தனர். இவ்வாறு இவர்கள் மன்றாடிய மருத்துவமனைகளின் எண்ணிக்கை ஒன்றல்ல, இரண்டல்ல..8. இதில் அரசு மருத்துவமனை ஒன்றும் அடக்கம். கர்ப்பிணி நீலம் ஆம்புலன்சில் குற்றுயிரும், குலையுயிருமாய் இருந்த நிலையில், இறுதியாக ஒரு மருத்துவமனையில் அனுமதி கிடைத்தது.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நீலம் இறந்துவிட்டார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டது. கர்ப்பிணி பெண் ஆம்புலன்சில் சுமார் 13 மணி நேரம் அங்கும், இங்கும், அலைக்கழிக்கப்பட்டதாக கூறி கணவர் விஜேந்தர் சிங் வெளியிட்ட இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இருவாரங்களுக்கு முன்பு தான் இதுபோன்று உரிய நேரத்தில், உதவி கிடைக்காமல் குழந்தை ஒன்று இறந்திருந்தது. தற்போது இதுபோன்ற புகார்கள் பெருகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், டெல்லியில் நோயாளிகளை எவ்வித தயக்கமும் இன்றி, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தர வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 

தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகள் அனைவருக்கும் சிகிச்சை தருகின்றனவா? என்று கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதற்கிடையில் கர்ப்பிணி இறப்பு குறித்து விசாரணை செய்யப்படும் என கவுதம் புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments