கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட வேண்டும்.
மின் கட்டணங்கள், டோல்கேட் கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டும். கொரோனா அபாயம் முடியும் வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். மேலும், அனைத்து கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக நேற்று (ஜூன்.27) தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோபாலபட்டினத்தில் கிளை தலைவர் முகம்மது ஹனிபா தலைமையில் பெரிய பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் SRM.சர்புதீன் கூறுகையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒட்டுமொத்த உலகமே பெருந்துயரில் சிக்கியுள்ளது. ஒவ்வொரு நாடும் இந்த தொற்றுக்கு எதிராக அனைத்து வகையான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகளினால் தங்களது குடிமக்கள் ஒருவரும் பாதிக்காத வகையில் அதனை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட இழப்புகளை விட அரசாங்கத்தால் திட்டமிடப்படாத நடவடிக்கைகள் மூலம் நாட்டின் குடிமக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் சிக்கியுள்ளவர்களை அவரவர் மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லக்கூட நீதிமன்றங்களின் உதவியை நாட வேண்டியிருந்தது.
இந்த சூழலில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்திலும் கூட தமிழர்களை மீட்பதில் மிகப்பெரும் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றது. மற்ற மாநிலங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்பட்ட விமான சேவையைக் காட்டிலும் தமிழகத்துக்கு இயக்கப்படும் விமான சேவைகள் மிகக் குறைவாக உள்ளது. தனி விமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை.
இதனால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், சுற்றுலா பயணிகள், வேலையிழந்தவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் என லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஆகவே, மத்திய,மாநில அரசுகள் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை போர்க்கால அடிப்படையில் மீட்டு தமிழகம் அழைத்துவர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேபோல் தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் வருமானமின்றி தவித்து வரும் வேளையில், நாட்டு மக்களின் கஷ்டங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு, பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரி 258 சதவீதமும், டீசல் மீதான கலால் வரி 820 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இது குடிமக்களின் மீதான மோடி அரசின் நேரடி தாக்குதலாகும். இதேபோல் தமிழக அரசும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
இதனால், சரக்குக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஆகவே, விலைவாசி உயர்வுக்கு மூல காரணமான பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
இதுமட்டுமின்றி முன்னெப்போதும் இல்லாத வகையில் மின்சார வாரியத்தின் தவறான நடவடிக்கை காரணமாக மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி டோல் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அரசின் நடவடிக்கைகளால் வருமானம் இல்லாமல் தவித்துவரும் மக்கள் மென்மேலும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும், கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக பலரும் வேலைவாய்ப்பை இழந்தும், வருவாயை இழந்தும் பெரும் துயரில் உள்ளதால், கொரோனா தொற்று முடிந்து பழைய நிலை திரும்பும் வரை ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
அதேபோல் கொரோனா வைரஸ் பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்ற உறுதியான காலக்கட்டத்தை கூற முடியாத நிலையில், தற்போது தனியார் உள்பட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது, தனியார் பள்ளி நிறுவனங்கள் ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இதற்காக கட்டணங்களை கட்ட பெற்றோர்களை வலியுறுத்தி வருகின்றன. ஆகவே, தமிழக அரசு தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை வெளியிடுவதோடு, அனைத்து கல்விக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் வலியிறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் கிளை நிர்வாகிகள்,செயல் வீரர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
தகவல்:
SDPI கட்சி கோபாலப்பட்டிணம்,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.