சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு.!தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை-மகன், போலீசார் தாக்குதலால் இறந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து வணிகர்கள் நேற்று கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.

புதுக்கோட்டை கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி உள்ளிட்ட கடைவீதிகளில் உள்ள ஜவுளி, நகைக்கடைகள், செருப்பு கடைகள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் மருந்து கடைகளும் குறிப்பிட்ட நேரம் அடைக்கப்பட்டன. உணவகங்களும் நேற்று ஒரு நாள் மூடப்பட்டன. புதுக்கோட்டை பஸ் நிலைய பகுதியில் ஒரு சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள் சிரமம்

கடை அடைப்பினால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. புதுக்கோட்டையில் டீக்கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன.

இதேபோல் ஆலங்குடியில் உள்ள மருந்து கடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பேக்கரிகள், செல்போன் கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தன. பொன்னமராவதியில் பஸ் நிலையம், அண்ணா சாலை, காந்தி சிலை, புதுவளவு, நாட்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பஸ் நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி கிடந்தன. ஆவுடையார்கோவில் பகுதியில் மருந்து கடை, பால் கடை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

கருப்பு பட்டை அணிந்து...

அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கடைவீதிகள், பஸ் நிலையம் என அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மருந்து கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மூடப்பட்டிருந்தது. அன்னவாசல், இலுப்பூர் உள்பட மாவட்ட பகுதிகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் 11 மணிக்கு பிறகே திறக்கப்பட்டது. அந்த கடைகளின் உரிமையாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் கருப்பு பட்டை அணிந்து பணி செய்தனர். மாலையில் பெரும்பாலான மருந்து கடைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

கீரனூரில் ஒரு சில காய்கறி கடைகள், டீக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் மாலை வரை மூடப்பட்டிருந்தன. சாத்தான்குளத்தில் இறந்த தந்தை- மகனுக்கு மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், இரங்கல் கூட்டமும், காந்தி சிலை அருகே நடைபெற்றது.

கந்தர்வகோட்டை,அறந்தாங்கி, அரிமளம் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

ஆதனக்கோட்டை மற்றும் பெருங்களூரில் ஒரு சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன. கறம்பக்குடி பகுதியில் ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments