புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை.!தனியார் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பயணிகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- 

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுருத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், பேருந்து நிலையம், கடை வீதி போன்ற பல்வேறு பகுதிகளில் கிறுமிநாசினி தெளித்தல் போன்ற பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நேரடி ஆய்வு செய்யப்பட்டது. இன்று முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பயணம் செய்யும் வகையில் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுவதால் பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என அறிவுருத்தப்பட்டது.

மேலும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அடிக்கடி கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளை சுத்தப்படுத்தவும், பேருந்தில் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டும் பயணிகளை கட்டாயம் ஏற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போன்று சளி, காய்ச்சல் போன்ற அறிக்குறி இருப்பவர்களை பேருந்தில் கட்டாயம் ஏற்ற கூடாது. மேலும் பயணிகளிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், அறிவுருத்தப்பட்டுள்ளது.

பேருந்துகளில் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிக பயணிகளை ஏற்றும் பேருந்து நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே அனைத்து பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து உரிய முறையில் பேருந்துகளை இயக்கி அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம், கீழ ராஜவீதி, அண்ணாசிலை போன்ற புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட முக்கிய இடங்களில் ஒலிபெருக்கிகள் நிரந்தரமாக அமைத்து கொரோனா குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தும் வகையில் இன்றைய தினம் முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் இளங்கோவன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments