பச்சிளங்குழந்தைகளுக்கு பசும்பால் இலவசம்!' புதுக்கோட்டை டீக்கடைக்காரரின் நேசக்கரம்



டெல்டா மாவட்டங்களையே சிதைத்துப் போட்ட கஜா புயலை எப்படி அவ்வளவு எளிதில் மறக்க முடியாதோ, அதே போலத்தான் வம்பன் 4 ரோட்டில் இருக்கும் பகவான் டீக்கடையை புதுக்கோட்டை வாசிகள் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள்.
கஜா புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் தன் கடையில் வைத்திருந்த டீக்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து அசத்தினார். அதோடு, வனமகள் சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்குச் செம்மரம், சந்தனமரம் கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.


சிவக்குமார் கொடுத்த மரங்கள் பல இன்று செழித்து வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையில்தான் தற்போது, பச்சிளம் குழந்தைகளின் நலனுக்காக, தன் கடையில் வாழ்நாள் முழுவதும் பச்சிளம் குழந்தைகளுக்குப் பால் இலவசமாக வழங்குவதாக அறிவித்து, தினமும் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால் வழங்கி வருகிறார். டீக்கடையில் சிறிய வருமானம் கிடைத்தாலும், அதையும் வாடிக்கையாளர்கள், விவசாயிகளுக்கு உதவும் வகையில் செலவிடும் சிவக்குமாருக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



இதுபற்றி சிவக்குமாரிடம் பேசினோம்,

கொரோனாவைக் கட்டுப்படுத்த மொதல்ல ஊரடங்கு போட்டபோது, டீக்கடை, மளிகைக் கடை எல்லாம் இல்லை. வெளிய வரமுடியாத நிலை. பால் சப்ளை இல்லை. பால் சரிவர கிடைக்காம பச்சிளங்குழந்தைகள் ரொம்பவே சிரமப்பட்டாங்க. நம்ம கடையில பாக்கெட் பால் எல்லாம் இல்லை. சுத்தமான பசும்பால் டீ தான். எனக்கு வாடிக்கையாகப் பசும்பால் கொடுங்கிறவங்க வீட்டுக்குப் போய் வாங்கி வந்து பால் கிடைக்காத குழந்தைங்க வீட்டுக்குக் கொடுத்தேன். அப்பதான், கடை ஆரம்பிச்ச உடனே குழந்தைகளுக்கு இலவசமாகப் பால் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கணும்னு தோணுச்சு. பசும்பால் கிடைக்காமலும், காசு கொடுத்து வாங்க முடியாமலும் சில குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இப்போ கடை ஆரம்பிச்சாச்சு திட்டத்தையும் அறிவிச்சு பச்சிளங்குழந்தைகள், குழந்தைகளுக்கு இலவசமாகப் பசும்பால் கொடுக்கிறேன். சுற்றுவட்டாரப் பொதுமக்களும் ரொம்ப ஆர்வமாக வாங்கிக்கிட்டுப் போறாங்க. கொரோனாவுக்கு அப்புறம் பல கட்டுப்பாடுகள் முன்னாடி மாதிரி வியாபாரம் பெரிசா இல்லை. வருமானமும் இல்லை. மொதல்ல எப்படி வாழ்நாள் முழுவதும் குழந்தைகளுக்குப் பசும்பால் இலவசமாகக் கொடுக்கப்போறோம்னு தோணுச்சு. ஆண்டவன் பார்த்துக்குவாருன்னு சொல்லிட்டு திட்டத்தை ஆரம்பிச்சிட்டேன். ரொம்ப நாள் திட்டம் நிறைவேறிடுச்சு" என்கிறார் உற்சாகத்துடன்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments