புதுக்கோட்டை அருகே மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்டார்
     புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் மேல்நிலைவயல் இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 54). சமையல் மாஸ்டரான இவர் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் ஓட்டல்களில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலையில்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலச்சந்திரன் சொந்த ஊர் வந்தார். இவருடைய மனைவி இந்திராகாந்தி. இவர்களுக்கு உதயகுமார் (28), அருண்குமார் (26) என 2 மகன்கள்.

இதில் மூத்த மகன் உதயகுமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அருண்குமார் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். டிரைவர் வேலைக்கு சென்று வந்த அருண்குமார், நிரந்தரமாக பணிக்கு செல்லவில்லை. மாற்று டிரைவராக அவ்வப்போது சென்று வந்தார். அதில் கிடைக்கும் பணத்தில் மதுகுடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் அருண்குமாரை அவரது தந்தை கண்டித்தார்.

தகராறு

கடந்த ஒரு வாரமாக தந்தைக்கும், மகனுக்கும் தொடர்ந்து தகராறு இருந்து வந்தது. இதனால் பாலச்சந்திரனின் மனைவி இந்திராகாந்தி, அருகில் காயம்பட்டி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பா, மகன் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். பகலில் இருவரையும் அக்கம், பக்கத்தினர் பார்த்து உள்ளனர். மாலைநேரம் ஆனதால் பசியால் வீட்டில் இருந்த மாடுகள் சத்தம்போட்டன.

இதையடுத்து அக்கம், பக்கத்தினர் வீட்டு கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு திறக்கவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது பாலச்சந்திரன் தூக்கில் தொங்கியபடியும், அருண்குமார் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மகனை அடித்துக்கொன்று...

இதுகுறித்து தகவல் அறிந்த கே.புதுப்பட்டி போலீசார், பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுக்கோட்டையில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் வீட்டின் உள்ளே சுற்றி வந்து படுத்துக்கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. சம்பவத்தன்று தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகன் அருண்குமாரை கட்டையால் அடித்து கொன்று விட்டு, செய்வதறியாமல் பாலச்சந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

பரபரப்பு

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments