16 வயது சிறுவனை போலீஸார் மடக்கிப்பிடித்து விசாரித்தபோது, இந்த வாகனம் மட்டுமில்லாமல், அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களைத் திருடியதாகக் கூறி போலீஸாருக்கே அதிர்ச்சிகொடுத்தான்.
புதுக்கோட்டையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள், அதிக அளவில் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. குறிப்பாக, கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து வாகனங்கள் திருடுபோயின. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் கணேஷ் நகர் போலீஸாரிடம் புகார்களை அடுக்க, உடனே போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இருசக்கர கொள்ளையர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்ட போலீஸார், புதுக்கோட்டை- தஞ்சாவூர் பிரதான சாலை, அண்டக்குளம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், திருடுபோனதாகப் புகார் கொடுக்கப்பட்ட வாகனத்தில் புதுக்கோட்டை - தஞ்சை சாலையில் வந்த 16 வயது சிறுவனை போலீஸார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.
புதுக்கோட்டை: `ஃபாலோ அப்; மாற்றுச் சாவி!’- டூவிலர் கொள்ளையில் சிக்கிய 16 வயது சிறுவன்
அப்போது, இந்த வாகனம் மட்டுமில்லாமல், அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களைத் திருடியதாகக் கூறி, போலீஸாருக்கே அதிர்ச்சிக் கொடுத்தான். திருடிய வாகனங்களைத் தெரிந்தவர்களிடம் அடகு வைத்துவிட்டு, அந்தப் பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து ஆடம்பர செலவுகள் செய்துவந்ததாகவும் கூறினான். 8 இருசக்கர வாகனங்களையும் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து போலீஸார் பறிமுதல்செய்தனர்.
அதன்பின்பு, சிறுவனைக் கைதுசெய்த போலீஸார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில்தான் சிறுவனை சொந்த ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவனின் பெற்றோர்களை அழைத்து, சிறுவனுக்கு அறிவுரைகள் வழங்கிய போலீஸார், சிறுவனை பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். 16 வயது சிறுவன், 8-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் திருடிய சம்பவம் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி போலீஸார் கூறும்போது, ``ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில்தான் சிறுவன் இருசக்கர வாகனங்களைக் குறி வைத்துத் திருடியுள்ளான். திருடிய வாகனங்களைத் தெரிந்தவர்களிடம் அடகுவைத்து, அவர்களிடம் குறைந்தபட்ச தொகையை வாங்கியிருக்கிறான். தொடர்ந்து வாகனங்களை ஃபாலோஅப் செய்து, மாற்றுச் சாவிகளைப் போட்டுப் பார்த்து, உரிமையாளருக்குத் தெரியாத வகையில் திருடிச் சென்றுள்ளார். சில வண்டிகளைப் பகலிலேயே திருடி இருக்கிறார். அனைத்து வண்டிகளையும் மீட்டுவிட்டோம். சிறுவனுக்கு புத்திமதிகளைக் கூறி அனுப்பிவைத்திருக்கிறோம். தொடர்ந்து, இதுற்றி விசாரித்துவருகிறோம்" என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments