தமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்


Tamil Nadu Has Created a Detention Camp Just to Hold 129 Foreign Tablighi Jamaat Members என்ற தலைப்பில் thewire இணையதளத்தில் பத்திரிக்கையாளர் சுகன்யா சாந்தா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.மார்ச் முதல் வாரத்தில், எத்தியோப்பியாவைச் சேர்ந்த முக்தாரும் அவரது மனைவியும், ஒரு மாத கால ஆன்மிக சுற்றுலாவில், டெல்லி வந்தடைந்தனர். அவர்களது மூன்று வயதுள்ள மகனை முக்தாருடைய பெற்றோரின் பாதுகாப்பில் விட்டு வந்திருந்த அவரது மனைவிக்கு இந்தியா வருவது முதன்முறை என்பதால் பதட்டமாகவே இருந்தார். பிரதமர் மோடியின் திடீர் தேசிய ஊரடங்கு அறிவிப்பினாலும்; தப்லீக் ஜமாஅத்தினர் தான் கொரோனா தொற்றை பரப்பும் முகவர்கள் என்று அவதூறு பரப்பட்டதாலும் அவர்கள் இன்று சிறையில் வாடுகின்றனர்.

முக்தாரும் அவரது மனைவி உள்ளிட்ட 129 ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் முதலில் புழல் சிறையிலும், பின்னர் சைதாப்பேட்டை கிளை சிறையிலும் தொடர்ந்து நீதிமன்றங்கள் பிணை வழங்கியபின் புழலிலுள்ள சிறார் சிறையிலுமாக வலுக்கட்டாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண்,  பெண் உள்ளிட்ட 31 நபர்கள், புழல் இரண்டாம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றது.

தாய் தந்தைக்காக ஏங்கும் 3 வயது எத்தியோப்பியா குழந்தை
இதற்கிடையில் அடிஸ் அபாபா ( எத்தியோப்பியா ) விலிருந்து பேசிய முக்தாரின் சகோதரி ஃபவ்ஸியா, ” முக்தார் குடும்பம் குறித்த சரியான தகவல் இல்லாமல் தாங்கள் தவித்துப் போயுள்ளதாகவும், குறிப்பாக மூன்று வயது குழந்தை தனது தாய், தந்தை குறித்து அழுது அடம்பிடிக்கும்போது சமாளிக்க வழியின்றி தவிப்பதாகவும், இதனால் குடும்பம் நிம்மதியிழந்து தவிப்பதாகவும் ” வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

35 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3500 வெளிநாட்டவர் இந்தியாவின் பல பகுதிகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களில் பெண்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் முதியவர்களும் அடங்குவர் என்று மத்திய மத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில், இளம் தாய்மார்கள் உள்ளிட்ட 12 பெண்களுடன் சேர்த்து தமிழ்நாட்டில் சிக்கித்தவிக்கும் 129 நபர்களின் நிலைமை தான் மிகவும் வேதனையானது..

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15 இடங்களில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, மூடப்பட்ட பள்ளிவாசல்களிலும்; தனி நபர்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மாவட்டம் தோறும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்காக விமான நிலையத்தில் பயண ஆவணங்கள் பெற்று காத்திருந்த 10 மலேசிய நாட்டவரும் அடங்குவர். அன்று முதல் இவர்கள் பிண கிடைக்க தொடர்ந்து சட்டப்பூர்வமாக போராடினாலும், தமிழக அரசு இடைவிடாமல் இடையூறு செய்து வருகின்றது.

தடுப்பு முகாம் அமைத்த முதல் மாநிலம் தமிழகம்
ஒரு மாத கால முயற்சிக்குப் பின் தாய்லாந்து நாட்டவர் அறுவருக்கு மே 6 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது. ஆனால், அதனை செயல்படுத்தாமல் தமிழக அரசு வேறொரு ஆணை மூலம் அவர்களை தடுப்பு காவலில் தள்ளியது. 1946 ஆம் வருடத்திய வெளிநாட்டவர் குறித்த சட்டப்பிரிவு 3 (2)(ஈ) இன்படி, புழலிலுள்ள சிறப்பு முகாமில் அவர்கள் தங்கியிருக்க வேண்டுமென மே 8 அன்று தமிழக ஆளுநர் பன்வாரி லால் ப்ரோஹித் வெளியிட்ட அரசாணைப்படி, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

உலக அபாயமான கோரோனா நோய் தொற்று அபாயத்திலும், வெளிநாட்டவருக்கான தடுப்பு முகாம் அமைத்த முதல் மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. தடுப்பு முகாம்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலங்களில் கூட அவை வெளிநாட்டவருக்காக உபயோகப்படுத்தப்படாத நிலையில், புழல் சிறையில் உள்ள சிறார்களுக்கான சிறையை, தடுப்பு முகாமாக மாற்ற தமிழக அரசு முனைந்துள்ளது. இது தனிமை முகாமல்ல; தற்காலிக முகாம் தான் என அரசு கூறினாலும், அது போலியானது என வழக்கறிஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோத குடியேறிகளுக்கான முகாம்களை கர்நாடகா, மராட்டியம் போன்ற பல மாநிலங்கள் அமைத்திருந்தாலும், தமிழகம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. திருச்சியில் இலங்கை நாட்டவருக்கான சிறப்பு முகாம் இயங்கி வருகின்றது.
வழக்கறிஞர் ஆஸிம் செஹ்ஸாத்ஆனால், தமிழக அரசின் புதிய ஆணை மூலம், மத சிறுபான்மையினரை துன்புறுத்தும் முகாம்களை அமைத்துள்ள மாநிலங்களில் வரிசையில் தமிழகமும் இணைந்துள்ளது. மேலும் நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பின் சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் பெறப்பட்ட பிணை உத்தரவை இது செல்லாததாக்கி விடும் என வழக்கறிஞர்கள் அஞ்சுகின்றனர். தாய்லாந்து நாட்டவர்களுக்கான பிணை கிடைத்ததும் (மே 6) புழல் சிறையை அணுகியதாகவும், அவர்கள் சைதாப்பேட்டை கிளை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் பெறப்பட்டதாகவும், அங்கு சென்று அவர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் (மே 8) இந்த அரசாணை வெளியாகி தடை ஏற்பட்டதாகவும், இவர்களின் விடுதலைக்காக போராடி வரும் வழக்கறிஞர்களில் ஒருவரான ஆஸிம் செஹ்ஸாத் தெரிவிக்கின்றார்.

சிறையில் அடைத்திருப்பது சட்ட விரோதம்
பிணை மற்றும் அரசாணைக்கு இடைப்பட்ட காலத்தில், அவர்களை சிறையில் அடைத்திருப்பது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்ட அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறினார். விசா விதிமீறல்களுக்காக நாடெங்கும் சுமார் 3500 வெளிநாட்டவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், வெளிநாட்டவர் தங்களது சொந்த செலவில் பிணை காலத்தில் தங்கிக் கொள்ள அனுமதி இருந்தும், இவர்களுக்கு புகலிடம் தர பல பள்ளிவாசல்கள் மற்றும் உள்ளூர் குழுக்களும் முன் வந்த நிலையிலும், தமிழக அரசு சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளதாக வருத்தத்துடன் பதிவு செய்தார்.

புழல் சிறார் சிறை 30 நபர்களுக்காக கட்டப்பட்டிருந்தும், அதில் 129 வெளிநாட்டவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து வரும் வழக்கறிஞர்களில் ஒருவர், ” தங்களது விடுதலை மற்றும் தாய்நாடு திரும்புவது குறித்தும் வினவுவதாக குறிப்பிட்டவர், உள்ளூர் உணவு ஒத்துக்கொள்ளாமல் பலர் பசியோடிருப்பதாகவும், தங்களது குடும்பத்தினருடன் பேசிக்கொள்ள முடியாததால் சோர்வடைந்து உள்ளதாகவும்” பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

இவர்களுக்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து ஒருங்கிணைப்பதிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா முன் நிற்கின்றார். அனேக வெளிநாட்டு குடும்பங்களுக்கு இவர் மட்டுமே தொடர்பு புள்ளியாக செயலாற்றி வருகின்றார்.

ஏப்ரலில் சிறை பிடிக்கப்பட்டதிலிருந்து, சரியான தகவல்கள் கிடைக்காமல் அல்லலுறுவதாக பலர் வருத்தத்துடன் பதிவு செய்தனர்.

26 வயதான தனது மகன் அமீருல் ஹஃபீஸ் குறித்து மலேசிய தூதரகம் மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக ஹுஸைன் பின் ஹஸன் என்பவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 11 வரை தனது மகன் நாள்தோறும் வீடியோவில் உரையாடி வந்ததாகவும், நான்காவது முறையாக இந்தியா சென்ற ஹஃபீஸுக்கு இது வேதனையளிப்பதாக அமைந்து விட்டதாகக் கூறிய ஹஸன் தனது பாட்டனார் காலத்திலிருந்து தனது குடும்பத்தினர் இப்பயணங்களை மேற்கொன்டு வருவதாகவும், இப்படி மோசமான சம்பவம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்றும் பதிவு செய்தார்.

மார்ச் மாதம் கொரோனா தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்த நேரம், நிஜாமுதீன் மர்கஸிலிருந்த ஓரிருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதும், ஆளும் பாஜக அரசும்; அவர்களை சார்ந்து இயங்கும் ஊடகங்களும்; சமூக வலைத்தளங்களும், மத வெறுப்பு பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்தனர். இதனால், இம்மாநாட்டில் பங்குபெற்றவர்கள் மீது நாடெங்கும் பல குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. ஓரிருவர் தவிர மற்றவர்களுக்கு நோய் தொற்று காணப்படாவிட்டாலும், கைது செய்யப்பட்டவர்கள் புழல் சிறையில் மொத்தமாக அடைக்கப்பட்டதால் பின்னர் 40 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

குற்றச்சாட்டுகள்
மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியர்கள் மீது பரவும் நோய்தொற்று குறித்த சட்டம் மற்றும் பல பிரிவுகளில் வழக்குகள் பதியப்படும் வேளை, வெளிநாட்டவர் மீது கூடுதலாக விசா விதிமுறைகளை மீறியதாகவும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அரசு தரப்பு வாதிடக்கூடிய விசா சட்ட உட்பிரிவு 15 இல் வெளிநாட்டவர் தப்லீக் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தலும், மத வழிபாட்டுத்தலங்களை தரிசிக்கவோ; மதக்கூட்டங்களில் பங்குபெறவோ தடையில்லை.

இந்திய விசா குறித்த பொது நெறிமுறைகளில் “தப்லீக்” என்ற சொல் காணப்பட்டாலும், வேறு எந்த ஆவணங்களிலும் அது தெளிவுபடுத்தப்படவில்லை என வழக்கறிஞர் ஆசிம் தெளிவுபடுத்தினார்.

மராட்டியம்; ஹரியானா; மற்றும் உ.பி யில் சுமார் 100 க்கும் அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். என்றாலும், நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பின்னும், உள்துறை அமைச்சகம் இவர்கள் மீதான ” லுக் அவுட்” அறிவிப்பை விலக்கிக் கொள்ளாததால், தாயகம் திரும்புதல் இயலாததாக உள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 29 இல் 10 ஆண்டுகள் இந்தியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ” இவர்களது விசா நிராகரிக்கப்பட்டால், ஏன் இவர்கள் இன்னும் இந்தியாவில் உள்ளனர். உடனடியாக அவரவர் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை. தடை குறித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியே விளக்கப்பட்டுள்ளதா அல்லது பொதுவாக சொல்லப்பட்டுள்ளதா என்று நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர் சுவாமிநாதனின் மனிதாபிமான பார்வை
ஜூன் 12 அன்று, 31 நபர்களை பிணை குறித்த வழக்கை மனிதாபிமான பார்வையில் விசாரித்து விடுவித்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத்த்தின் மதுரை அமர்வு நிதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன்,

பேராசிரியர் உபேந்திர பாக்ஸியின் மேற்கோள் படி, ஒவ்வொரு அரசமைப்பு சட்டமும், நமக்கானது என்றும்; அவர்களுக்கானது என்றும் பாகுபடுத்தி விளக்கப்பட்டிருந்தாலும், அனைவருக்கும் பொதுவானதான சில அம்சங்களும் உள்ளன. அதன்படி பிரிவு 21, மனுதாரர்களுக்கும் பொருந்தக்கூடியது தான். மனுதாரர்களின் இருப்பின் மீதான கண்ணியத்தை காக்க தவறினால், அநீதி இழைத்ததாகி விடும். மனுதாரர்கள் போதுமான அளவு தண்டனை அனுபவித்துள்ளனர் என நான் கருதுவதால், இதில் தலையிடுவது எனது கடமையாகிறது என குறிப்பிட்டுவிட்டு, சிறார் சிறையில் உள்ளவர்கள் உடனடியாக சிறை வளாகம் தவிர்த்த வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டுமென, மத்திய உள்துறை அமைச்சகம் ஜனவரி 9, 2019 இல் மாதிரி முகாம்கள் / தடுப்பு மைய்யங்கள் குறித்த அறிக்கையில் வெளியிட்டிருந்தபடி அரசுக்கு உத்தரவிட்டார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த 39 விஷயங்களில், முதலாம் அம்சமே, சிறை வளாகம் தவிர்த்த இடம் என்பதாகும். தமிழக அரசு இதனை மதிக்கவில்லை என ஜவாஹிருல்லா குற்றம் சுமத்தினார். தொடக்கம் முதலே, இவர்கள் சிறை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், நீதிமன்ற ஆணைக்குப் பிறகும் அது மாற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அதைப்போலவே, உறவினர்களுடனான தொடர்பு வசதி, தனி சமையலறை, சுத்தமான தண்ணீர் உள்ளிட்ட எந்த அடிப்படைகூறுகளும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. சொல்லப்போனால், பிற கைதிகளை விட மிக மோசமாக நடத்தப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், சென்னை காஸிமியா அரபிக் கல்லூரி இவர்களுக்கான தங்குமிடத்திற்காக பொறுப்பேற்க முன்வந்த போதும், தமிழக அரசு அதனை புறந்தள்ளியுள்ளது.

பலமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு குறித்த நீதிமன்றத்தின் முடிவிற்காக காத்திருப்பதகவும், அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து மேல்முறையீடு செய்ய தயாராகி வருவதாகவும் மனுதாரர்களின் வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.

மனுதாரர்களின் உறவினர்கள் உலகின் பல பகுதியிலிருந்தும் தங்களது சொந்தங்கள் தாயகம் திரும்புவதற்காக காத்திருப்பதோடு, தமது உறவினர்கள் மூலம் மத அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ” நாங்கள் எப்பொழுதும் இந்தியாவை நேசிக்கிறோம். இந்தியாவின் அழகையும், விருந்தோம்பலையும் நாங்கள் என்றும் நினைத்திருக்கும்படி செய்யுங்கள். எங்களது குழந்தைகள் மீது நடத்தப்படும் மனிதநேயமற்ற செயல்களை முடிவுக்கு கொண்டு வாருங்கள் — என ஹுஸைன் உணர்ச்சிப்பூர்வமாக வேண்டினார்.

நன்றி; தி வையர் ஜுன் 30 2020

” நாங்கள் எப்பொழுதும் இந்தியாவை நேசிக்கிறோம். இந்தியாவின் அழகையும், விருந்தோம்பலையும் நாங்கள் என்றும் நினைத்திருக்கும்படி செய்யுங்கள். எங்களது குழந்தைகள் மீது நடத்தப்படும் மனிதநேயமற்ற செயல்களை முடிவுக்கு கொண்டு வாருங்கள்” –ஹீசைன் பின் ஹசன் (புழலில் சிறைப்பட்டுள்ள மலேசியர் முஹம்மது அமீருல் ஹபீசின் தந்தை)
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments