தமிழக கிராமப்புறங்களில் ஒரு கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் மூலம் ஏற்பாடு.!



மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் மூலம் தமிழக கிராமப்புறங்களில் ஒரு கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதுகுறித்து ஜல் ஜீவன் திட்ட இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு (எல்.எச்.டி.சி.) அளிப்பதற்கான ஜல் ஜீவன் என்ற திட்டத்தை (ஜே.ஜே.எம்.) கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளுக்கு நீர் பாதுகாப்பு அளிப்பது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஊரகப்பகுதி மக்களுக்கு நீண்ட காலத்துக்கு குடிநீர் கிடைக்கும் நோக்கத்தோடு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நீர் ஆதாரங்களை மேம்படுத்தி, அதை பாதுகாத்து, மறுபயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை இந்தத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்காக 2020-21-ம் ஆண்டில் ரூ.917.44 கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. அந்த வகையில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 19 லட்சத்து 74 ஆயிரத்து 985 இணைப்புகளை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதற்காக முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட திட்ட கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட கணக்கின்படி, மொத்தமுள்ள 12 ஆயிரத்து 525 ஊரகப் பகுதிகளில் 79 ஆயிரத்து 395 குடியிருப்புகள் உள்ளன. அங்கு 1 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரத்து 45 இணைப்புகள் அளிக்கப்பட வேண்டும். ஆனால் ஏற்கனவே 21 லட்சத்து 67 ஆயிரத்து 723 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் உள்ளன. எனவே ஒரு கோடியே 5 லட்சத்து 21 ஆயிரத்து 322 இணைப்புகளை வழங்க வேண்டும்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில், ஆர்சனிக், புளோரைட் ரசாயனத்தால் நீர் பாதிக்கப்பட்ட பகுதிகள், வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகள், எஸ்.சி., எஸ்.டி. மக்கள் அதிகம் வாழும் பகுதிகள், முன்மாதிரி கிராமத் திட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments