நம்ம புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது.!



மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது.
முதல் தொற்று
பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவிய நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அதன் பாதிப்பு இல்லாமல் இருந்தது. அதன்பிறகு, மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் கொரோனா தொற்று பதிவானது. அதாவது அரிமளம் அருகே மிரட்டுநிலை பகுதியில் டெல்லி சென்று வந்த ஒருவரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
அவர் சிகிச்சையில் இருந்து அப்போது பூரண குணமடைந்தார். அதன்பின் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்த தொழிலாளி ஒருவர் உள்பட 2 பேருக்கு தொற்று உறுதியானது.
5,068 பேர் பாதிப்பு
அதன்பிறகு, கடந்த 4 மாதங்களில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக அதிகரித்தது. நேற்று வெளியான பட்டியல்படி மாவட்டத்தில் 155 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,068 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 32 பேர் குணமடைந்தால் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3 ஆயிரத்து 623 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு பூரண குணமடைந்துள்ளனர். 1,373 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா இறப்பு எண்ணிக்கை 72 ஆக உள்ளது.
அன்னவாசல் போலீசார்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து மற்ற போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நேற்று ஏட்டு ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அன்னவாசல் போலீஸ் நிலையம் முழுவதும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அரிமளம்
அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 3 ஆண்கள் என 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், வன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments