புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு சாகுபடிக்கான விதைகள், உரங்கள் போதுமான அளவில் இருப்பு.. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தகவல்.!



விவசாயிகளுக்கு சாகுபடிக்கான விதைகள், உரங்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 6 மாதங்களுக்கு பிறகு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தகவல் மைய அலுவலக கூட்டரங்கில் காணொலிக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசியதாவது:-

2020-21-ம் ஆண்டில் கடந்த ஆகஸ்டு மாதம் முடிய நெல் 5,214 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 12,867 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப்பயிர்கள் 1,478 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 7,492 எக்டர் பரப்பளவிலும், கரும்பு 950 எக்டர் பரப்பளவிலும், தென்னை 10, 690 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 166.92 மெட்ரிக் டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 29.150 மெட்ரிக் டன் பயறு விதைகளும், நிலக்கடலை 14.746 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 11.555மெட்ரிக் டன், எள் விதைகள் 0.840 மெட்ரிக் டன் விதைகளும் இருப்பில் உள்ளது. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை பெற்றுச்சாகுபடி செய்யலாம். 

மாவட்டத்தில் தற்போது யூரியா 2,563 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 1,762 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,435 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 4,188 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

விவசாயிகளுக்கு தேவையான நெல் நுண்ணூட்டச்சத்து 32.10 மெட்ரிக் டன்கள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் காணொலிக்காட்சியில் விவசாய சங்க தலைவர் தனபதி பேசுகையில், ‘அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் இணைக்கப்பட்ட பகுதியை கோத்தரி சர்க்கரை ஆலையுடன் இணைக்க வேண்டும். மாவட்டத்தில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் கூடுதலாக ஒதுக்கீட வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு புதுக்கோட்டைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை முதல்-அமைச்சர் புதுக்கோட்டை வரும் போது தொடங்கி வைக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முழுமையாக இயங்க வேண்டும். மழைபெய்ததில் பல இடங்களில் நெல் மூட்டைகள் நனைந்துள்ளன. சிறுபாசன குளங்கள், கலிங்குகளை பராமரிக்க வேண்டும். மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது‘ என்றார்.

இதேபோல விவசாயிகள் பலர் காணொலிக்காட்சியில் பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கலெக்டர் பதில் அளித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 13 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் 240 விவசாயிகள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்று பேசினர். விவசாயிகளிடம் இருந்து 39 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments