நாட்டையே உலுக்கிய உத்தரபிரதேச கூட்டு பலாத்கார சம்பவம்: பெற்றோருக்கு தெரியாமல் இளம்பெண்ணின் உடலை எரித்த போலீசார்!



உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் பலியான பட்டியல் இன இளம்பெண் உடலை போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்தனர். இதனால், குடும்பத்தினர் கதறி அழுதனர். எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான பட்டியல் இன இளம்பெண், கடந்த மாதம் 14-ந் தேதி அங்குள்ள நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அக்கிராமத்தை சேர்ந்த உயர் ஜாதி இளைஞர்கள் 4 பேர், அந்த பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது, பெண்ணை கடுமையாக தாக்கினர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, நாக்கையும் அறுத்ததாக தெரிகிறது.

பலத்த காயங்களுடன் கிடந்த அப்பெண் மீட்கப்பட்டு, ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் தாக்கியதில், அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கி இருப்பதும், பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, டெல்லியிலும், உத்தரபிரதேசத்திலும் போராட்டங்கள் வெடித்தன. அரசியல்வாதிகள், திரையுலகினர், விளையாட்டு துறையினர் என பல்வேறு தரப்பினரும் நீதி கேட்டு குரல் கொடுத்தனர். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவு, பெண்ணின் குடும்பத்தினரை போலீஸ் பாதுகாப்புடன் ஹத்ராஸ் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் உடலுடன் போலீசார் மற்றொரு வாகனத்தில் சென்றனர். ஆனால், குடும்பத்தினர் செல்வதற்கு முன்பே போலீசார் அங்கு சென்றடைந்தனர். ஹத்ராஸ் மாவட்டம் பூல் காரி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில், பெண்ணின் உடலை தகனம் செய்தனர்.

பெண்ணின் குடும்பத்தினர் ஹத்ராசை அடைந்தவுடன், அவர்களை சுடுகாட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது, உடல் தகனம் நடந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

அங்கு போலீசாரும், அரசு அதிகாரிகளும் இருந்தனர். போலீசார், கலவரத்தை ஒடுக்கும்போது அணியும் உடைகளையும், ஹெல்மெட்டையும் அணிந்திருந்தனர்.

புதன்கிழமை (நேற்று) அதிகாலை 2.30 மணியில் இருந்து 3 மணிக்குள் உடல் தகனத்தை போலீசார் நடத்தியதாக, பலியான பெண்ணின் தந்தை கூறினார்.

பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் சிலர் கூறியதாவது:-

அந்த பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூட போலீசார் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் என்ன விரும்புகின்றனர் என்றே தெரியவில்லை. என்ன அரசியல் இது? வழக்கை குழிதோண்டி புதைக்க அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் விருப்பத்துடன்தான் உடல் தகனம் நடந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ராந்த் வீர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார்.

மாநில உள்துறை செயலாளர் பகவான் ஸ்வரூப் தலைமையிலான இக்குழுவை, 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து யோகி ஆதித்யநாத்தை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

ராகுல், பிரியங்கா

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “இந்தியாவின் ஒரு மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆதாரம் புதைக்கப்பட்டுள்ளது. இறுதியாக, இறுதிச்சடங்கு செய்யும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை பாதுகாப்பதற்கு பதிலாக, மரணத்துக்கு பிறகு கூட மனித உரிமையை பறிக்கும் வேலையில் யோகி ஆதித்யநாத் அரசு ஈடுபட்டுள்ளது. அவர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. ஆகவே, அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, “இச்சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “பா.ஜனதா அரசு, பெரிய குற்றத்தையும், பாவத்தையும் செய்துள்ளது” என்று கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments