சாலை வசதி இல்லாததால் மாணவரின் பிணத்தை வயல் வழியாக தூக்கிச் சென்ற அவலம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்குடி அம்மன்சாக்கி ஊராட்சி கீழ்குடி பகுதியில் 150-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு மயான கொட்டகை 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு செல்வதற்கு சாலை வசதியும் கிடையாது. இதனால், இறந்து போனவர் உடலை எடுத்துச் செல்வதில் உறவினர்கள் அதிகளவு சிரமப்பட்டு வருகின்றனர்.

 
இந்தநிலையில் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த 17 வயது மாணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்ய நேற்று மாணவரின் உடல் எடுத்து செல்லப்பட்டது. ஆனால், மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் அங்குள்ள வயல் பகுதியில் இறங்கி மிகுந்த சிரமத்துடன் உறவினர்கள் பிணத்தை தூக்கிச் சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உயிரிழப்பவர்களை தூக்கி சென்று தகனம் செய்ய போதிய சாலை வசதி இல்லை. இதனால், இறந்தவரை இவ்வாறு தூக்கிச் செல்லும் அவலநிலை நீடிக்கிறது. சாலை வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இனிமேலும், சாலை வசதி செய்து கொடுக்கவில்லை என்றால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments