குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராடிய 82 வயது பெண்மணி பல்கீஸ் தாதிக்கு காயிதே மில்லத் விருது அறிவிப்பு: காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை வழங்குகிறது
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 82 வயது பெண்மணி பல்கீஸ் தாதிக்கு 2020-ம் ஆண்டின் அரசியல், பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது வழங்கப்படும் என்று காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச்செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் அரசியல், பொது வாழ்வில் நேர்மைக்கான ‘காயிதே மில்லத் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. மனித உரிமைப் போராளி ஹர்ஷ் மாந்தர் தலைமையில் செயல்படும் காரவானே முஹப்பத் (அன்பிற்கான ஊர்தி) என்ற அமைப்புக்கும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னிலை வகித்த 82 வயது பெண்மணி பல்கீஸ் தாதிக்கும் 2020 -ம் ஆண்டுக்கான காயிதே மில்லத் விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.

கடந்த 2002-ல் குஜராத்தில் நடந்த படுகொலையையும், அராஜகத்தையும் கண்டு மனம் வெதும்பி தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தவர் ஹர்ஷ் மாந்தர். நாடு முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் சிறுபான்மையினர், தலித்கள் மீது நடந்துவரும் அடக்குமுறைகளை எதிர்க்க ‘காரவானே முஹப்பத்’ (அன்பிற்கான ஊர்தி) என்ற அமைப்பை தொடங்கினார். இதன்மூலம் பல முன்னணி சமூக ஆர்வலர்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறை முன்னாள் உயர் அதிகாரிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்டரீதியாக பாதுகாப்பு அளித்தும், நிவாரணம் அளித்தும் செயலாற்றி வருகிறார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பல்கீஸ் தாதி, இந்தப் போராட்டம் தொடர்வதற்கு காரணமாக இருந்தவர். சமீபத்தில் உலகின் வலிமை வாய்ந்த 100 பேரில் சுந்தர் பிச்சை, நரேந்திர மோடி, டொனால்ட் டிரம்ப் போன்றவர்களுடன் பல்கீஸ் தாதியையும் டைம்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விருது பெறுபவர்களுக்கு காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வரும் மாதங்களில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments