உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 6 வது முறையாக முதலிடம்: மத்திய அரசு விருது.!!



உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளதற்கான விருதினை காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வழங்கினார்.

உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி 11-வது இந்திய உடல் உறுப்பு தான தினத்தில் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. டெல்லியில் இருந்தபடி மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன், இணை மந்திரி அஷ்வினி குமார் சவுபே ஆகியோர் காணொலி காட்சி மூலம் இந்த விருதினை வழங்கினர். புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் காணொலியில் பங்கேற்று இந்த விருதினை பெற்றார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:-

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயமாகும். மக்கள் நல்வாழ்வுத்துறையில் இந்தியாவில் முன்னோடியாக தமிழகம் உள்ளது. ‘டபுள் ஹாட்ரிக்‘ சாதனையாக இந்த உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் இந்த விருதினை பெற்றுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்கிற முடிவை எடுக்கிற கொடையாளர்களுக்கு இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறோம்.

தமிழகத்தில் இதுவரை 1,392 கொடையாளிகளிடம் இருந்து 8 ஆயிரத்து 245 உறுப்புகள் வெளிப்படையாக தானமாக பெறப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் தொடர்பாக கின்னஸ் சாதனையாக மாரத்தான் ஓட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று காலத்திலும் 107 பேருக்கு கல்லீரல், 183 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் முழுமையாக நுரையீரல் பாதித்த 6 பேருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்தில் தான் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரி தனது பாராட்டை தெரிவித்தார். முதல்-அமைச்சர் தலைமையில் செயல்படக்கூடிய இந்த அமைப்பு வெளிப்படையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. வலுவான சுகாதார அமைப் பை கொண்டதாக தமிழகம் திகழ்கிறது.

உடல் உறுப்பு தானம் செய்யும் முறை ஆன்- லைனில் கொண்டுவரப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளை தானம் செய்யக்கூடிய விவரங்களை அதில் இருந்து பெறலாம். தானம் செய்யக் கூடிய உடல் உறுப்புகளை கொண்டு செல்லக்கூடிய ஏர் ஆம்புலன்சு சே வையை முதல்- அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் பணி நியமனத்தின்போது உடல் உறுப்பு தான கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை போல, மத்திய அரசும் வழங்க கோரிக்கை வைக் கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கலெக்டர் உமாமகேஸ்வரி உடன் இருந்தார். மத்திய அரசின் விருதினை பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கலெக்டர் உள்பட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments