புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக நாளை (நவ-9) 361 இடங்களில் கருத்து கேட்பு கூட்டம்.!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக 361 இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. முன்னேற்பாடாக அதிகாரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இதில் பள்ளிகளில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஒருசிலர் வரவேற்றிருந்தாலும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். இதனால் பள்ளிக்கூடங்களை திறப்பது தொடர்பாக மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும் எனவும், அதற்கான கூட்டம் வருகிற 9-ந் தேதி நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி முன்னேற்பாடாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி தலைமை தாங்கினார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக்குலேசன் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-மாவட்டத்தில் நாளை 361 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளின் அறைகளில் அந்தந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலந்து கொள்வார்கள்.

பள்ளிக்கூடத்திற்குள் வருகை தரும் பெற்றோரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படும். நுழைவுவாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்து, கைகளை கிருமிநாசினி மூலம் கழுவிய பின்பு, வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்படுவார்கள்.

பள்ளிக்களை திறக்கலாமா? வேண்டாமா? என்பதை மாணவ-மாணவிகளின் பெற்றோர் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இது தொடர்பாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மொத்தமாக பெறப்படும். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை என்ன? தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகளின் பெற்றோரை செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டும், வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments