மருத்துவ படிப்புக்கான ஆன்-லைன் விண்ணப்பத்தில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளலாம்.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.!!



புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- வளர்ந்த நாடுகள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான தடுப்பு நடவடிக்கையின் பயனாக தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பண்டிகை காலம் தொடங்கும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகழுவுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தவறாது பின்பற்ற வேண்டும். தீபாவளியை பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு சுயகட்டுப்பாட்டுடன் கூடிய தீபாவளியாக கொண்டாட வேண்டும். 

அரசுப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் மருத்துவக்கல்லுாரியில் பயில 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதன்படி மருத்துவ படிப்புக்கான ஆன்-லைன் விண்ணப்பம் கடந்த 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மாணவ-மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதுவரை 27 ஆயிரத்து 400 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்பத்தில் ஒரு சிலவற்றை தவறாக குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தால் மெயில் மூலம் தகவல் தெரிவிக்கலாம். யாரும் பயப்பட, பதற்றப்பட தேவையில்லை. தவறை சரி செய்துக்கொள்ள வாய்ப்பும், அவகாசமும் வழங்கப்படும். வருகிற 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்பின் பரிசீலனைக்கு பின் 16-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின் ஓரிரு நாட்களில் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக 148 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, விபத்து நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

மேலும் 64-வது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய விளையாட்டு போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டு வெற்றி பெற்ற 5 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் ஊக்கத் தொகைக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி, ஆறுமுகம் எம்.எல்.ஏ., வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments